×

நீலகிரியில் அடுத்த ஓராண்டிற்குள் சிறிய ரக பஸ்கள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிதாக இயக்கப்படும்

*ஊட்டியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து சிறிய ரக அரசு பஸ்கள் அனைத்தும் புதிதாக இயக்கப்படும் என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.8.32 கோடி மதிப்பில் 16 புதிய சிறிய ரக அரசு பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருணா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் எம்பி ராசா பேசியதாவது: தனிநபர் வருமானம், கல்வியறிவு, சுகாதாரமாக இருந்தாலும் முதல் மூன்று இடங்களில் மற்ற மாநிலங்களையும் காட்டிலும் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தியது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தை மலைப்பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தபோது, முதற்கட்டமாக நீலகிரியில் செயல்படுத்த உத்தரவிட்டார். இந்த தொகுதிக்கு 2009ல் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தபோது, முதலமைச்சராக இருந்த கலைஞர், இந்த தொகுதிக்கு கேட்டதையெல்லாம் தந்தார். அதே போல் இப்போதுள்ள நமது முதல்வர் தொகுதிக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் தந்து கொண்டிருக்கிறார்.

தேயிலைக்கு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கொள்முதல் விலையை ரூ.2 உயர்த்தி தர வேண்டும் என கேட்டபோது, அதனையும் உயர்த்தி தந்தவர் நமது முதல்வர். ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் நமது முதல்வர் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்து 8 லட்சம் கோடியை மாநிலத்திற்கு முதலீட்டை பெற்று வந்துள்ளார், என்றார்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்து, 16 புதிய சிறிய ரக பஸ்களை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். 25 ஆண்டுகள் விபத்தில்லாமல் பணிபுரிந்த 7 ஓட்டுநர்களுக்கு தங்க பதக்கமும், 10 ஆண்டுகள் விபத்தில்லாமல் பணிபுரிந்த 45 ஓட்டுநர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 3 ஓட்டுநர்கள், 10 நடத்துநர்களுக்கு பணி நியமன ஆணை, மேலும் கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் தயாரிக்கப்படும் சேரன் பெயிண்ட் விற்பனை செய்ய சிட்கோ குறிச்சி வளாகத்தில் சில்லறை விற்பனை நிலையத்தையும் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: நமது முதல்வர் பொறுப்பேற்றதற்கு பின்புதான் சீர்குழைந்து கிடந்த போக்குவரத்து கழகம், மீண்டும் சீர் பெற்றிருக்கிறது. கலைஞர் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த பஸ்களை அரசுடமையாக்கியதால்தான் பஸ் வசதியே இல்லாத கிராமங்களுக்கும் பஸ் சேவை வழங்கப்பட்டு தமிழ்நாடு சமச்சீர் வளர்ச்சியை பெற்றிருக்கிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 22 ஆயிரம் பஸ்களும், தனியாரிடத்தில் 5 ஆயிரம் பஸ்களும் உள்ளன. போக்குவரத்து வசதி நிறைந்த முழுமையான மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் பெருநகரங்களில் மட்டுமின்றி குக்கிராமங்கள் வரை பஸ்கள் இயக்கப்படுகிறது.

அரசு பஸ்கள் மக்களுக்கு முழுமையாக செயல்பாட்டில் உள்ளதற்கு காரணம் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதால்தான் சாத்தியமாகிறது. பண்டிகை காலங்களில் விடுப்பின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்றனர். மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முதல் தேதியில் சம்பளம் பெறுவது என்பது சிரமமான நிலையில் இருந்தது.

தற்போது முதல் தேதியில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு காரணம் மகளிர் விடியல் பயண திட்டம் ஆகும். கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ரூ.2,700 கோடியை முதல்வர் வழங்கினார். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.3,050 கோடியை வழங்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி டீசல் மானியம் ரூ. 1,500 கோடி, மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இத்துறை நஷ்டத்தில் இருந்தாலும், பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டியது முடிக்கப்படாமல் 20 முறை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் தேர்தல் சமயத்தில் இடைகால நிவாரணத்தை அறிவித்து விட்டு சென்றார்கள்.

நம்முடைய முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மூன்றே பேச்சுவார்த்தையில் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான பே மேட்ரிக்ஸ் முறையில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிைறவேற்றப்பட்டது.கடந்த ஆட்சி காலத்தில் தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. நீலகிரியில் மகளிர் விடியல் பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் எஸ்ஏடிபி நிதியின் கீழ் 16 புதிய பஸ்கள் துவக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலைப்பகுதியில் இயங்கும் சிறிய ரக பஸ்கள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிதாக இயக்கப்படும். அடுத்த ஓராண்டில் அனைத்து பஸ்களும் புதிதாக இயங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்கிற மாதன், ஊட்டி மண்டல பொது மேலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

அரவேனு வழியாக புதிய வழித்தடத்தில் பஸ் சேவை

கோத்தகிரி-மாரிஸ் நகர் மற்றும் கோத்தகிரி-குன்னூர் இடையே அரவேனு, அளக்கரை, வண்டிச்சோலை வழியாக புதிய வழித்தடத்தில் புதிதாக பஸ் இயக்கப்படுகிறது. நிறுத்தப்பட்ட வழித்தடங்களான பி.மணியட்டி – கோவை, ஊட்டி – குண்டல்பேட் இடையே மீண்டும் இயக்கப்படுகிறது.

இதேபோல் கப்பச்சி வரை இயக்கப்பட்டு வந்த பஸ் கெந்தொரை, மொரடகொம்பை வரையிலும், நாடுகாணி வரை இயக்கப்பட்ட பஸ், கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேவாலா வரையிலும், அதேபோல பந்தலூரில் இருந்து கோவை வரை இயக்கப்பட்ட பஸ் அய்யன்கொல்லி முதல் கோவை வரையிலும், முள்ளிகூரில் இருந்து மேட்டுபாளையம் வரை இயக்கப்பட்ட பஸ் கோவை வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் அடுத்த ஓராண்டிற்குள் சிறிய ரக பஸ்கள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிதாக இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Transport ,Ooty Ooty ,Minister ,Nilgiri ,Ooty Central Bus Station ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...