×

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்துக்கும் மோடி அரசு நிதி கொடுப்பதில்லை

*கனிமொழி எம்பி பேச்சு

கோவில்பட்டி : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்துக்கும் மோடி அரசு நிதி கொடுப்பதில்லை என்று கோவில்பட்டியில் நடந்த திமுக மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, மகளிருக்கு சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் ‘‘வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படிச்சாதான் டாக்டராகவே முடியும். அதை எல்லாம் மாற்றியது திராவிட இயக்கம். இன்றைக்கு மறுபடியும் டெல்லியில் இருக்கக்கூடிய மோடியுடைய ஒன்றிய அரசு எப்படி நாம் கஷ்டப்பட்டு போராடி உரிமைகளை பெற்றோமோ அந்த உரிமைகளை எல்லாம் பறிக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் மருத்துவ கல்லூரியில் போய் படிக்கலாம் என்ற உரிமையை, இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது திராவிட இயக்கம். இதை எல்லாம் ஒழிக்கக்கூடிய வகையில் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வை கொண்டு வந்து படிக்க முடியாத நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

புதிய கல்வி கொள்கை சட்டத்தை கொண்டு வந்திருச்சுன்னா மோடி அரசாங்கம் நமது வீட்டில் இருக்கக்கூடிய எந்த பிள்ளையும் கல்லூரிக்கு போக முடியாத ஒரு நிலையை உருவாக்கி காட்டுவார்கள். ஒரு நல்ல இடத்தில் வேலை பார்க்க முடியாது. தலை நிமிர்ந்து இந்த சமூகத்தில் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்து காட்ட முடியும் என்ற அந்த தன்னம்பிக்கையோடு வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. அதனால இந்த தேர்தல் பெண்களுடைய உரிமைகளை பாதுகாக்க கூடிய தேர்தல். அதே நேரத்தில் இந்த தேர்தல் என்பது நம்முடைய அடுத்த தலைமுறை அவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போய்விடாமல் நம்ம பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஒன்றிய பாஜ அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பணத்தை குறைத்து கொண்டே வருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டும் நான் சில மாதங்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டபோது ₹320 கோடிக்கு மேல் நமக்கு தர வேண்டும். ஆனால் தரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசாங்கம் வாங்கும் வரியில் ஒரு ரூபாய்க்கு நமக்கு திருப்பி கொடுப்பது 26 பைசாதான். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். மழை வெள்ள பாதிப்பின் போது நிவாரணத் தொகையில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசாங்கம் கொடுக்கவில்லை. நமக்கான எந்த திட்டத்துக்கும் மோடி ஆட்சி காசு கொடுப்பதில்லை’’ என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி சேர்மனும், நகரச் செயலாளருமான கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்திரசேகர், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், கருப்பசாமி, சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தானம், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சிவா, பீட்டர், ராமர், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் அழகர்சாமி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கடம்பூர் முருகன், நாலாட்டின்புத்தூர் கிளைச் செயலாளர் புவனேஷ்குமார், இந்துமதி, விஜயா, அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ரவி, மாரிச்சாமி, அன்பழகன், முனியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தீவிரவாதிகள் போல் விவசாயிகளை ஒடுக்கும் பாஜ அரசு

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் ‘‘தமிழகம் வளம் பெற வேண்டும், தமிழக மக்கள் வாழ்வு உயரவேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருகிறார். தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். 85% தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

தமிழில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிதியில் இருந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு, ஒன்றி அரசு நிதி தருவது போல பொய்யாக பேசி வருகின்றனர். ஜெயலலிதா மறையும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ள ஒன்றிய அரசு திட்டங்கள் அனைத்திற்கும் கையெழுத்திட்டார்.

பெரிய முதலாளிகள், பெரிய நிறுவனங்களின் கடன்களை பிரதமர் மோடி 16 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் கல்விகடன், விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை. கல்விக்கடனை கந்து வட்டி வசூலிப்பது போல வசூல் செய்கின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல் ஒடுக்கும் போக்கை பாஜ அரசு கடைபிடிக்கிறது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி வந்தால் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு கிடையாது.

யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விட, யாருக்கு வாக்களிக்க கூடாது. மத்தியில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் மிக முக்கியம். அதனை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி வேட்பாளராக நிற்பார் என்று நம்புகிறோம்’’என்றார்.

The post தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்துக்கும் மோடி அரசு நிதி கொடுப்பதில்லை appeared first on Dinakaran.

Tags : Modi government ,Tamil Nadu ,Kanimozhi ,Kovilpatti ,DMK ,Kovilpatti Assembly ,
× RELATED பெண்கள் பாதுகாப்புக்கான அவசர...