சீதா கல்யாணம் முடிந்ததும், உடனடியாக ஒரு சிக்கல் வருகிறது. ஆம்; தசரதன் மிகவும் மகிழ்ச்சியோடு தம்முடைய புதல்வர்கள் நால்வருடனும், மருமகள்களோடும் அயோத்திக்குப் புறப்படும் போது, சகுனங்கள் மாறுபடுகின்றன. ஏதோ ஒரு கஷ்டம் விரைவில் வரப்போவதை நிமித்திகர்கள் சொல்லுகின்றார்கள். அது மட்டுமல்ல;
“வருவது துன்பம்தான் என்றாலும், அது சூரியனைக் கண்ட பனி போல விரைவில் விலகிவிடும்” என்றும் அவர்களே சொல்லுகின்றார்கள். இருந்தாலும், விலகும் வரை துன்பம் துன்பம் தானே; அதை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும். குழப்பத்தோடு தேர் ஏறி நிற்கும் பொழுது, எதிரே காலனைப் போல கையில் வில்லுடன் காட்சி தருகிறான் பரசுராமன்.
“நிருபர்க்கு ஒரு பழி பற்றிட,
நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழு வாள் கொடு
களை கட்டு, உயிர் கவரா,
இருபத்தொரு படிகால், எழு கடல்
ஒத்து அலை எறியும்
குருதிக் குரை புனலில் புக
முழுகித் தனி குடைவான்’’.
– என்று பரசுராமன் தோற்றத்தை கம்பன் விவரிப்பார்.
ஸ்ரீராமாயணத்திலே பரசுராமனும் ஸ்ரீராமனும் சந்திக்கக் கூடிய சுவையான கட்டம் இது. இதனை பெரியவாச்சான் பிள்ளை ‘‘இருபத்தொருகால் அரசுகளை கட்ட மழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டு அவன் தவத்தை முற்றும் செற்று’’ என்று ஆழ்வார்கள் பாசுர வரிகளைக் கொண்டு தொகுக்கிறார். இதிலே ஒரு நுட்பம் இருக்கின்றது. பகவான், எத்தனையோ அவதாரங்களை எடுத்தாலும், பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று பிரதானமாகச் சொல்லுகின்றார்கள். இன்னும் பகவான் கல்கி அவதாரம் எடுக்கவில்லை. ஆனாலும்கூட இந்த அவதாரங்கள் ஒவ்வொரு யுகங்களிலும் பகவான் எடுப்பதாகவும், ஒரு கணக்கு இருக்கிறது. இந்த பத்து அவதாரங்களிலே ஒரே பெயரை உடைய அவதாரங்கள் மூன்று உண்டு. அந்த பெயர்தான் ராமன். ராமன் என்கிற பெயரில் உள்ள அவதாரங்கள் மூன்று. ஒன்று ராமனுக்கு முன்னால் இருக்கக்கூடிய அவதாரம் பரசுராம அவதாரம். ஒன்று பின்னால் வரக்கூடிய அவதாரம் பலராம அவதாரம். இந்த அவதாரங்கள் வரிசையை ஆழ்வார்கள்;
“தேவுடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவில் இராமனாய்க்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல
மலரேறி ஊசலாடிப்
பூவணைமேல் துதைந்தெழு
செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே’’.
– என்ற பாசுரத்திலே வரிசைப்படுத்தி பாடி இருக்கின்றார்.
இதிலே ராம அவதாரம் பூரண அவதாரம். பரசுராம அவதாரம் ஆவேச அவதாரம். பலராம அவதாரம் அம்ச அவதாரம். இரண்டு அவதாரங்கள் சந்திக்கும் பொழுது, ஒரு அவதாரத்தின் அம்சத்தை இன்னொரு அவதாரம் ஆகர்ஷணம் செய்து வாங்கிக்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவினுடைய அவதாரங்களில், பூரண அவதாரமாகிய ராமன் அவதரித்த பின்னால், இன்னொரு அவதாரமாகிய பரசுராம அவதாரத்தின் வலிமை ராமனிடத்திலே ஐக்கியமாக வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்வு நடக்கிறது.
அதனால் தான் “வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டு அவன் தவத்தை முற்றும் செற்று” என்று ஆழ்வார்கள் பாடி இருக்கின்றார்கள். பரசுராமன், தசரதனை எதிர்க்கவில்லை. பரசுராமருடைய நோக்கம், சத்திரிய அரசர்களை வெல்வது. அந்த அடிப்படையில் இப்பொழுது, அரசன் என்கிற நிலையில் இருக்கிறவன் ராமன் அல்ல, தசரதன்தான். அதனால் அவன் தசரதனைத்தான் சண்டைக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால், வந்தவுடனே அவன் ராமனை சண்டைக்கு அழைக்கின்றான்.
‘‘ஊன வில் இறுத்த மொய்ம்பை
நோக்குவது ஊக்கம் அன்றால்,
மானவ மற்றும் கேளாய்,
வழிப் பகை உடையன் நும்பால்,’’
‘‘ராமா, நீ ஏதோ ஒரு வில்லை உடைத்தாயாமே. அது ஏற்கனவே உடைந்த வில். ஊனவில்லை உடைத்ததால் நீ பலமடைந்துவிடவில்லை. உன்னோடு (ஷத்ரியர்களோடு) எனக்குத் தீராப் பகை உள்ளது. இப்பொழுது என் கையிலே இருக்கிறது விஷ்ணுவில். முடிந்தால் இந்த வில்லை நீ ஏற்று; பார்ப்போம்’’ என்று சவால் விடுகின்றார்.
“உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்,
உறு பகை ஒடுக்கிப் போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து,
ஓர், அருவரை இருந்தேன், ஆண்டைச்
சிலையை நீ இறுத்த ஓசை
செவி உறச், சீறி வந்தேன்
மலைகுவன், வல்லை ஆயின்,
வாங்குதி வில்லை’’
– என்றான்.
தசரதன் நடுங்குகின்றான். ஆனால், ராமன் எந்த பதற்றமும் அடையவில்லை. ஒரு அவதாரத்தின் வலிமை இன்னொரு அவதாரத்துக்கு தெரியாமல் போகுமா? ஏற்கனவே நிகழ்ந்த ஒரு அவதாரத்தின் அம்சமானது, தம்முள் ஐக்கியமாகப்போகிறது என்ற உணர்வோடு பரசுராமன் தந்த வில்லை வாங்குகின்றான். நாண் ஏற்றுகின்றான். அம்பைப் பூட்டுகின்றான். இலக்கு எது? என்று பரசுராமனிடமே கேட்கின்றான்.
“பூதலத்து அரசை எல்லாம்
பொன்றுவித்தனை என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன்
மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலில் கொல்லல் ஆகாது;
அம்பு இது பிழைப்பது அன்றால்,
யாது இதற்கு இலக்கம் ஆவது?
இயம்புதி விரைவின்’’
– என்றான்.
ராம அவதாரத்தின் இலக்கு இனிமேல்தான் என்பதையும், பரசுராமன் இலக்கு அதாவது நோக்கம் முடிந்துவிட்டதையும் இந்த வார்த்தை சுட்டிக் காட்டுகின்றது. வில்லில் அம்பைப் பூட்டி பரசுராமனுடைய முழு அம்சத்தையும் தான் வாங்கிக் கொள்கின்றான். இந்த சம்பவங்களின் மூலமாகச் சீதைக்கு இரண்டு விஷயங்கள் புரிகின்றன.
1. தம்மை மணப்பதற்கு முன், வில்லை ஒடித்த ராமனின் தோள் வலிமை புரிந்தது.
2. யாராலும் (தசரதன் உட்பட) வெல்ல முடியாத பரசுராமனைத் துணிச்சலோடு எதிர்த்து, அவன் தந்த வில்லை நாணேற்றியதன் மூலமாக ராமனின் பேராற்றல் சீதைக்குப் புரிகிறது.அதனால்தான் அசோகவனத்தில் அவள் எத்தனையோ கொடுமைக்கு உள்ளான போதும், வரபலம் மிக்க ராவணனை தன்னுடைய மணாளனான ராமனால் மிக எளிதாக வெற்றி கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. மனைவிக்கு கணவனின் அறவீரம் மகிழ்ச்சியைத் தரும் அல்லவா. ராமன் பரசுராமரை அடக்கியதன் மூலம் சீதைக்கு தந்த முதல் மகிழ்ச்சி அது.
தேஜஸ்வி
The post மனைவிக்குக் கணவன் தந்த முதல் மகிழ்ச்சி appeared first on Dinakaran.