மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு வளம் பெருக்கும் சமயச் சடங்குகளில் ஒன்றான மழுவடி சேவையில், இளம்பெண் தனது தளிர்க்கரத்தால் வானகமும் வையகமும் வாழ மண் செழிக்க, மூன்று மாரி மாதமும் பொழிக, என்று பலவிதமான வாழ்த்துகளைக் கூறி அதில் வாழ்த்துவதைப் பற்றி அறிவோம். அப்படி அடிக்கும் பெண்ணுக்குத் தீயினால் தீங்கு நேராமல் காத்தருளும் தெய்வமே மழு பொறுத்த விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். மழுவடி சேவை நடைபெற்ற தலங்களில் மழுவா சேவையை நிகழ்த்த விரதம் ஏற்கும் பெண் அதற்கென அமைந்த விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தியபின் ஊர்வலமாக மழுவடித் தலத்திற்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அவள் வணங்கி விடை பெற்றுச் செல்லும் விநாயகர் ஆலயத்திற்கு மழு பொறுத்த விநாயகர் என்பது பெயராயிற்று.
மழுவினால் எந்தத் தீங்கும் வராமல் அந்த நிகழ்ச்சியில் ஏற்படும் தீயின் வெம்மையைத் தாம் பெற்றுப் பொறுத்துக் கொள்வதால், அவர் இப்பெயர் பெற்றார். காஞ்சிபுரத்தை ஒட்டி அமைந்ததும், புராதனச் சிறப்பு மிக்கதுமான பெருநகர் என்னும் கிராமத்தில் “மழு பொறுத்த விநாயகர்’’ ஆலயம் உள்ளது. இக்கோயில் முன்னாளில் இங்கு மழுவடி சேவை நடந்ததனை நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஆலயமாக உள்ளது.
மழு அடிப்பதோடு மழுவை கைகளில் வாரி எடுத்தல், நாவால் மழு எடுத்தல் முதலிய சடங்குகளும் இருந்து வந்துள்ளன. சத்தியத்தையும் தமது உறுதிப் பாட்டையும் விளக்க வந்தவர்கள் கைகளால் மழு வெடுத்துள்ளனர். சிவனே பரம்பொருள் என்பதை உறுதியிட்டுக் கூறிய ஹரதத்தர் மழுவாக ஜொலித்த முக்காலியின்மீது அமர்ந்து தமது கருத்துக்களைச் சுலோக பஞ்சகம் என்னும் நூலாகப்பாடி அதிசயம் நிகழ்த்தியுள்ளார்.
நாவால் மழுவெடுத்த நமச்சிவாயர் கசவிராயர் என்பவர் பற்றியும் வரலாற்றில் காண்கிறோம். விநாயகர் மழுவடி சேவையில் பங்கு பெறும் பக்தனின் இன்னல்களை ஏற்றுக் கொள்வதைப் போலவே பராசக்தியும் ஏற்றுக் கொள்கிறார். அவளுக்கு மழு பொறுத்த நாயகி என்னும் பெயர் வழங்குகிறது.
தோஷங்கள் போக்கும் புலியகுளம் முந்தி விநாயகர்
ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் எனப் போற்றப்படும் கோவை “புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர்’’ ேகாயிலாகும். நகரப் பகுதியில், சாலையின் மையத்தில் கோயில் அமைந்திருப்பதால், அந்த வழியாகச் செல்லும் பக்தர்கள் அவரை வணங்காமல் செல்வதில்லை. கோயில் பிரகாரத்துக்குள் சென்றால்தான் சுவாமி கண்ணுக்கு காட்சி தருவார் என்பதை கடந்து, வெளியே இருந்தே பிரமாண்ட விநாயகர் வழிபட முடியும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆடிவெள்ளி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள் பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் ஆகிய பதினோரு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. சரஸ்வதி பூஜை நாளில் குழந்தைகளின் நாக்கில் விநாயகரின் மூலமந்திரத்தை எழுதி கல்விப்பயணத்தை துவக்குகின்றனர். முந்தி விநாயகரை தொழுதால், ராகு, கேது தோஷங்கள், நவகிரஹதோஷம் நிவர்த்தியாகும். ஐஸ்வரியங்கள் பெருகும். பதினாறு வகை பேறுகளும் கிடைக்கும்.
அனந்தபத்மநாபன்
The post மழு பொறுத்த விநாயகர் appeared first on Dinakaran.