×

பைக் சாகசம் செய்து அச்சுறுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய கோரிக்கை

 

உடுமலை, பிப்.25: உடுமலை காந்திநகர் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி நகரைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், வங்கிகள் உள்ளன. உடுமலை-மடத்துக்குளம் சாலை, உடுமலை-பொள்ளாச்சி சாலை, உடுமலை-தாராபுரம் சாலை, உடுமலை-தளி சாலை ஆகியன அருகருகே அமைந்துள்ளதால் இவ்வழித்தடங்களில் நாள் முழுவதும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.

குறிப்பாக காலை, மாலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கும், பள்ளிக்கும் செல்வதால் பீக் அவர்ஸில் காந்தி நகர் செல்ல சாலையை கடக்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக இளைஞர்கள் சிலர் மோட்டார் பைக்குகளில் பள்ளி முடிந்து செல்லும் பீக் அவர்ஸில் வீலிங் செய்தபடி அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர்.

இதில் சைலென்சர்கள் இல்லாத பைக்குகளில் அதிவேகமாக ரைடிங் செல்கின்ற இளைஞர்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. குறிப்பாக வயதானவர்கள், சிறுவர், சிறுமியர்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். இந்நிலையில்,பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் மிரள செய்யும் வகையில் பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி விடும் சமயங்களில் இது போன்ற வீலிங் சாகசங்களில் ஈடுபடும் வாலிபர்களை பிடித்து அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்வதோடு, அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பைக் சாகசம் செய்து அச்சுறுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Gandhinagar ,Gandhi Nagar ,Udumalai- ,Madathikulam road ,Pollachi road ,Tharapuram road ,Udumalai-Tali road ,Dinakaran ,
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்