×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வராத ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.10,000 அபராதம்: மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடவடிக்கை

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வராத 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் வரும் வழியிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்லாமல், ஜிஎஸ்டி சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்கின்றன. இதனால் ஆம்னி பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில், ஏராளமான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவல்துறையினருடன் இணைந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல் சென்ற ஆம்னி பேருந்துகளை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் சோதனை தொடங்கியது. இரவு 10 மணி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிய 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்தனர். இந்த சோதனையில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கே.கே நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், பெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களும், கிளாம்பாக்கம் போக்குவரத்து காவலர்களும் ஈடுபட்டனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வராத ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.10,000 அபராதம்: மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,CHENNAI ,Clambakkam Kalainar Centenary Bus Terminal ,South Districts… ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது...