×

ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில், கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும், புறகாவல்நிலையம் நிரந்தரமாக அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக, பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநில அரசும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய ரயில் நிலைய பணிகள் அடுத்த 6 மாதங்களில் இந்த ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் சில கி.மீ தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும். மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, ரயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது,’’ என்றார்.

The post ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,Southern Railway ,CHENNAI ,Vandalur ,Klambakan ,Kalambakan ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது...