×

உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பு: 7 பல்கலைக்கழகங்கள் மீது குற்றச்சாட்டு

சேலம்: உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டும், பெரியார், பாரதிதாசன் உள்பட 7 பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படாத பணியிடங்களில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் பெரியார், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்பட பல்வேறு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 41 உறுப்பு கல்லூரிகள், அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதற்காக புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதுடன், ஏற்கனவே அங்கு பணிபுரிந்து வந்த குறிப்பிட்ட சில பணியாளர்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே திரும்ப அழைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதேசமயம், பல உறுப்பு கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்படாத பாடங்களை, பல்கலைக்கழகங்களே தோற்றுவித்து, அதற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அப்பாடங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கும் வரை, அங்கு பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே வழங்கவேண்டும். மேலும், அதனை அரசு பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன் உள்பட 7 பல்கலைக்கழகங்கள் பல மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, பல்கலைக்கழகங்களால் நியமிக்கப்பட்டவர்களுக்கு, தற்போது அவர்களே ஊதியம் வழங்க மறுப்பது வேதனை அளிக்கிறது. ஊதியம் வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டும் அதனை பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டும், பென்னாகரம், இடைப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி, சேந்தமங்கலம் கல்லூரிகளைச் சேர்ந்த 8 கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 9 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த நவம்பர் மாத சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேற்கோள் காட்டி, சம்பள வழங்க இயலாது என பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தெரிவித்துள்ளார். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதேபோல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 30 கவுரவ விரிவுரையாளர்கள், 49 மணிநேர விரிவுரையாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 118 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதேநிலை தான் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் காணப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான கவுரவ விரிவுரையாளர்களும், இதர பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை தலையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பு: 7 பல்கலைக்கழகங்கள் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Periyar ,Bharathidasan ,Education ,Salem Periyar ,Coimbatore Bharatiyar ,Trichy Bharathidasan ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...