×
Saravana Stores

ரவுடிகளை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் சவுண்ட் சர்வீஸ் கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு: முகப்பேரில் 2 சிறுவர்கள் கைது

அண்ணாநகர்: முகப்பேரில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை தட்டிக்கேட்டதால் சவுண்ட் சர்வீஸ் கடைமுன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பிய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை முகப்பேர் வேணுகோபால் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதுபோதையில் 4 பேர் கும்பல் ஆபாசமாக பேசியபடி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டபோது கத்தியை காட்டி மிரட்டியும் ரோட்டில் கத்தியை வீசியும் நெருப்பு வரவைத்தும் மிரட்டியதால் பீதியடைந்தனர்.

அப்போது, சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வரும் சிறுவன், கும்பலை தட்டிக்கேட்டபோது ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக சிறுவனை தாக்கியது. பதிலுக்கு சிறுவனும் கும்பலை தாக்கியுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பிசென்றது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி சவுண்ட் சர்வீஸ் கடை முன்பு வீசியது. டமார் என சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்க்கும் சிறுவனிடம், எங்களிடம் தகராறு வைத்துகொண்டால் ‘உன்னை கொன்று விடுவோம்’ என மிரட்டிவிட்டு கும்பல் தப்பிசென்றது.

இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில், சென்னை அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடி வந்தனர். ஒரு மணி நேரத்தில் கும்பலில் இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முகப்பேர் பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் என்பதும் மேலும் 2 சிறுவர்கள் தப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவர்கள் கூறுகையில், நேற்று இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்க்கும் சிறுவன், இந்த பகுதியில் நிற்கக்கூடாது என கூறினான். இதனால் அவனை அடித்தோம். பதிலுக்கு அவனும் எங்களை தாக்கினான். இதுகுறித்து போலீசில் புகார் கூறியதால் ஆத்திரத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசி பயமுறுத்தினோம்” என கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் நேற்று இரவு முழுவதும் 4 பேர் கொண்ட கும்பல் மது போதையில் அட்டகாசம் செய்து வந்தனர். இவர்களை தட்டிக்கேட்டால் கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தோம். இதுகுறித்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது போலீசார் சரியான நேரத்துக்கு வரவில்லை. திடீரென பயங்கர சத்தத்துடன் சத்தம் கேட்டதால் பீதியடைந்தோம்.

வெளியில் வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டுவீசியது தெரியவந்தது. எங்கள் பகுதியில் அடிக்கடி குற்றசம்பவம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் போலீசார் சரிவர ரோந்து வராததால் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, காவல் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர். சென்னை முகப்பேரில் பழிக்கு பழி வாங்குவதற்கு சவுண்ட் சர்வீஸ் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

The post ரவுடிகளை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் சவுண்ட் சர்வீஸ் கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு: முகப்பேரில் 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Athram Sound Service shop ,Muqapper ,Annanagar ,Mukabher ,Chennai Mukappher… ,Mukappher ,Dinakaran ,
× RELATED 135 அடி உயரமுள்ள அண்ணாநகர் டவரில் ஏறி...