×

இந்தாண்டு போதிய மழை பெய்ததால் தூத்துக்குடியில் முன்கூட்டிேய பதநீர் சீசன் துவக்கம்

கோவில்பட்டி : போதிய மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் முன்கூட்டியே பதநீர் சீசன் துவங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், குளத்தூர், விளாத்திகுளம், பெரியசாமிபுரம், சித்தவநாயக்கன்பட்டி, வேடப்பட்டி, அயன்வடலாபுரம், தாப்பாத்தி, கருப்பூர் போன்ற ஆற்றுப்படுகையோர கிராமங்கள், குறுமண் பாங்கான நிலங்கள் நிறைந்த பகுதிகளில் பனைத்தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலின் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடி மாதம் கடைசி வரையாகும். தற்போது கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பதநீர் சீசன் துவங்கியுள்ளது.

இந்தாண்டு போதிய மழை பெய்துள்ளதால் பாளை முன் கூட்டி வந்துவிட்டது. தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேளை பனைமரத்தின் உச்சிமீது ஏறி மட்டையின் அருகே உள்ள பாளையை மிருதுவாக சீவி விடுவார்கள். அதில் உள்ள ஈரப்பதம் சுரந்து சொட்டு சொட்டாக மட்டையில் கட்டப்பட்டிருக்கும் பானை போன்ற வடிவமுள்ள கலயத்தில் வடியும், இதுவே பதநீர் ஆகும். அக்கலயத்திற்குள் சுண்ணாம்பு தடவினால் பதநீராகிறது. சுண்ணாம்பு தடவாமல் விட்டால் அதுவே ‘கள்’ ஆகும்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பனை ஏற ஆரம்பித்து விடுவார்கள். பனைமரத்தில் பனங்கருப்பட்டி, பனங்கூழ், பனங்கற்கண்டு, சில்லு கருப்பட்டி, தவன், கிழங்கு, பனம்பழம், குருத்து கிடைக்கிறது. இது கடினமான தொழிலாகும். ஆறு மாதம் மட்டுமே செய்யப்படும் தொழில் என்பதால் மீதமுள்ள காலம் மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பனைமரத்தில் அடி முதல் நுனி வரை அனைத்தும் பயன்தரக்கூடியதாகும்.

கடந்தாண்டு சீசனில் ஒரு கிலோ பனங்கருப்பட்டி ரூ.250 வரை விற்பனையானது. தினமும் சுமார் 30அடி உயரம் வரை உள்ள பனைமரத்தின் உச்சிவரை பனையேறி பாளை சீவ ஒருவர் 50 பனைகள் வரை மூன்று முறை ஏறி இறங்குவதற்குள் நாடி நரம்புகள் எல்லாம் சோர்வடைந்துவிடும். இதனால் கடந்தகாலங்களில் தொழில் செய்த பலர் இத்தொழிலின் சிரமம் கருதி அவர்களது சந்ததியினரை மாற்றுத் தொழிலுக்கு அனுப்பி விட்டனர். எஞ்சியுள்ள சில குடும்பங்களே இத்தொழில் செய்கின்றனர்.

சில நேரங்களில் காவல்துறை கெடுபிடி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பனைத்தொழில் ஆண்டுக்காண்டு நலிவடைந்து வருகிறது. பனைத்தொழிலை பாதுகாக்க கோடிக்கணக்கான பனைவிதைகளை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல தொழிலாளர்கள் பனைத்தொழில் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை. நலவாரியத்தில் செயல்படுத்தப்படும் நல திட்டங்கள் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பனை தொழிலாளர்களுக்கு பதநீர் காய்ச்சும் வட்டை, அரிவாள், சுண்ணாம்பு, கூஜா, முறுக்குத் தடி, முதலுதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். பனைத்தொழில் செய்வோருக்கு கருப்பட்டி, கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயாரிப்பு செய்ய அரசு மானியத்துடன் கடனுதவி செய்வதாக தெரிவித்துள்ளது. அது விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக்கு உட்பட்டிருக்கவேண்டும் என கூறுகின்றனர். இதனால் புதூர் வட்டார பனைத்தொழில் புரிவோர் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் பனைமரம் வளர்ப்பு, மறுபுறம் பனைத் தொழிலை அழிக்கும் அதிகாரிகள், தமிழர்கள் பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் காவல் துறை அதிகாரிகள் இத்தொழில்புரியும் குடும்பங்களை நிம்மதியாக தொழில் செய்யவிட வேண்டும். பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post இந்தாண்டு போதிய மழை பெய்ததால் தூத்துக்குடியில் முன்கூட்டிேய பதநீர் சீசன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Kovilpatti ,Tuticorin district ,Thiruchendur ,Ebenkudi ,Chatankulam ,Kulathur ,Vlathikulam ,Periyasamipuram ,Siddhavanayakkanpatti ,Vedapatti ,Ayanvadalapuram ,Thapatti ,Karuppur ,
× RELATED தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும்...