×

பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத கிணறுகள் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

 

உடுமலை, பிப்.23: பி.ஏ.பி கால்வாய் கரையில் சட்ட விரோத கிணறுகள் அமைக்கும் பணியை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது முதல் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

பி.ஏ.பி பாசனத்திற்கு திறக்கப்படும் நீர், கால்வாய் கரையில் கிணறுகள் அமைத்தும், சைடு போர் அமைத்தும், கரைகளை துளையிட்டும், நேரடியாக ஓஸ் அமைத்தும் திருடப்படுகிறது. இதனைத்தடுக்க விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், கால்வாய்களின் கரையில், 50 மீட்டர் துாரம் அமைந்துள்ள கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பி.ஏ.பி உடுமலை கால்வாய், கிளுவன்காட்டூர் கிளை கால்வாய் சரகம் கி.மீ 3.325ல் கரையின் இடதுபுறம் 37 மீட்டர் தொலைவில் புதிதாக வெட்டப்பட்டு வந்த கிணறு பணியை, அதிகாரிகள் குழுவினர் தடுத்து நிறுத்தினர். இதே கால்வாய் பகுதியில், சரகம் 8.440 கி.மீட்டரில் கால்வாய்க்கு மிக அருகில், 7.50 மீட்டருக்குள் வெட்டப்பட்டு வந்த கிணறு பணியையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

The post பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத கிணறுகள் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : PAP canal ,Udumalai ,BAP ,Coimbatore ,Tirupur ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு