×

பின்தங்கிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க் கோவை, திருச்சி, மதுரையில் பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா: ஐடி ஹப்பாக மாறும் தமிழ்நாடு

இன்று தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்டுள்ள புரட்சிக்கு முக்கிய காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்தான். எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு, 1996-2001 திமுக ஆட்சியில் காலத்தில் ‘எம்பவர் ஐடி’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டிகள் எல்லாம் கொண்டு சேர்த்தவர் கலைஞர். 1997ம் ஆண்டு தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்க தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்.

தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998ம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார். தொடர்ந்து, ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக டைடல் பார்க்கை கட்டி, 2000ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்தார். இதுதான் இந்தியாவின் முதல் ஐடி பூங்கா. இதன் மூலம் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.  தற்போது நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பெங்களூர், ஐதராபாத், மும்பை போன்ற நகரங்கள் வேகமாக முன்னேறி வருகிறது.

இதற்கு போட்டியாக சென்னையிலும் ஏராளமான நிறுவனங்கள் காலூன்றி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் மட்டும்தான் ஐடி நிறுவனங்கள் உள்ளது. ஆனால் கோவையில் பெரிய அளவிலான நிறுவங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் இல்லை. இதனால், மாநில முழுவதும் ஐடி வேலை தேடி சென்னையை நோக்கிதான் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர். தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை கோவை, ஓசூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

ஆனால் விழுப்புரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வளரவில்லை. இதனால் சென்னை மற்றும் கோவையை தவிர தமிழ்நாட்டில் வளர்த்து வரும் நகரங்களான திருச்சி, மதுரை, சேலம் மற்றும் தொழில் நிறுவனங்கள் இல்லாத, கல்வி, பொருளாதாரத்தின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தின் மாணவர்களையும், தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் தயார்படுத்தி கொள்வதற்கு தொலைநோக்கு பார்வையுடன் ‘நான் முதல்வன்’ திட்டம், ‘அறிவுசார் நகரம்’ மற்றும் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐடி துறையில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக நகரங்களை உருவாக்கும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு மினி டைடல் பூங்காக்கள் திட்டத்தை அரசு அறிவித்தது.

அதில் முதல் மாவட்டமாக விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு 2022ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் ரூ.31 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விரைவில் இந்த டைடல் பார்க் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல், விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர்தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரமாண்ட ஐடி பூங்காவும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் நியோ டைடல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னை மற்றும் கோவையில் மட்டுமே செயல்பட்ட ஐடி நிறுவனங்களை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டு ஐடி நிறுவனங்களால் தமிழ்நாடு ஐடி ஹப்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

* விருதுநகரில் ரூ.1,683 கோடியில் ஜவுளி மற்றும் ஆயுத்த ஆடைகளுக்கான பூங்கா அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* கோவை, ஈரோட்டிலும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* சேலத்தில் சிப்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் பூங்கா மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் ரூ.120 கோடியில் சிப்காட் நிறுவனம் ஒரு தொழிற்பூங்காவை அமைக்கிறது. இங்கு உணவு பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களுக்கென புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் 9000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* தூத்துக்குடியில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படுகிறது.

எங்கெங்கு ஐடி பார்க்
* கோவை விளாங்குறிச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* மதுரையில் ரூ.350 கோடியில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் ஐடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* திருச்சியில் ரூ.345 கோடியில் 6 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் ஐடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* விழுப்புரம் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* ஹோட்டல், ஜிம் என நவீன வசதிகளுடன்…
சென்னை நகரை போன்று விழுப்புரத்தில் திறக்கப்பட்ட மினி டைடல் பூங்கா நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 63,000 சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் குளிர்சாதன வசதிகள், தொலை தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின் தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீயணைப்பு பாதுகாப்பு, கட்டிட மேலாண்மை, மின்விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, ஹோட்டல் மற்றும் ஜிம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மினி டைடல் பார்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கோவை, திருச்சி, மதுரை மற்றும் நியோ டைடல் பூங்கா அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

* பல ஆண்டு கனவு நிறைவேறியது: முதல்வருக்கு நன்றி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவழகன் கூறுகையில், ‘சென்னைக்கு அடுத்தபடியாக தென்மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாக விழுப்புரம் உள்ளது. ரயில் நிலையம், மிகப்பெரிய போக்குவரத்து வசதிகளை கொண்ட மையப்பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. பொறியியல் பட்டம் முடித்தவர்கள் ஐடி துறை வேலைக்காக சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட மினி டைடல் பார்க் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அவர்கள் ேவறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு வேலைக்காக படையெடுப்பதை தவிர்த்து சொந்த ஊரிலேயே பணியாற்றி பண, காலவிரயத்தை தவிர்த்து தன்னிறைவு வாழ்க்கை அடைய முடியும்.

ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதன் மூலம் அவர்களின் குடும்பங்களும் பாதுகாக்கப்படும். இந்த மினி டைடல் பார்க் மேலும் விரிவடைந்து விழுப்புரத்தை சுற்றியுள்ள மாவட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இளைஞர்களின் பல ஆண்டுகால கனவை நனவாக்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இன்றும், நாளையும் ஐடி மாநாடு
தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு ஐடி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து வெளியேறு ஐடி நிறுவனங்கள், கோவை மற்றும் மதுரையை நோக்கி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க பிப்ரவரி இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ‘umagine TN2024’ மாபெரும் ஐடி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஏஐ தொழில்நுட்படம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட உள்ளன. இந்த மாநாட்டு 1000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். 10,000 மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்ளனர் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

The post பின்தங்கிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க் கோவை, திருச்சி, மதுரையில் பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா: ஐடி ஹப்பாக மாறும் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : MINI TIDAL PARK CO. ,TRICHI, MADURA ,TAMIL NADU ,Timuka ,Mini ,Tidal Park Goa, Trichy, Madura ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...