×

போலீசார் சுட்டு விவசாயி பலி அரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதியுங்கள்: விவசாய சங்கம் கோரிக்கை

சண்டிகர்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட விவசாயிகள் முயன்ற போது, பஞ்சாப், அரியானா எல்லையான கானவுரியில் போலீசாருக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் குண்டால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 21 வயது விவசாயி தலையில் குண்டடி பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதனால் 2 நாட்களுக்கு விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ள ஷம்பு, கானவுரி எல்லை நிலவரம் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், ‘‘விவசாயியின் மரணம் தொடர்பாக அரியானா முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும். விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும்’’ என்றார். மேலும், விவசாயி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று விவசாயிகள் கறுப்பு தினமாக அனுசரிப்பார்கள் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோரின் உருவபொம்மையை எரிப்பதாகவும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே, அடுத்த மாதம் கோதுமை கொள்முதல் சீசன் தொடங்கும் முன்பாக விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என ஒன்றிய உணவு துறை செய்லாளர் சஞ்சீவ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post போலீசார் சுட்டு விவசாயி பலி அரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதியுங்கள்: விவசாய சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ariana ,Agrarian Association ,CHANDIGARH ,PUNJAB ,ARIANA STATE ,DELHI ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்