×

வண்ணங்களும் எண்ணங்களும்

பூமியானது பல ஆற்றல்களை கிரகிக்கக் கூடியதாக உள்ளது. அந்த ஆற்றல் முழுவதும், அண்டவெளியில் இருந்து, சூரியனின் ஒளிகற்றைகளின் சிதறல்களிலும் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அப்படிப் பரவியுள்ள ஆற்றல்களை, இந்த பூமியானது ராசி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதன் வழியே உள்வாங்கிக் கொள்கிறது. அந்தந்த மண்டலங்களில் உயர்திணை அஃறிணைப் பொருட்கள் அனைத்தும் அவற்றை பெற்றுக் கொள்கின்றன. இந்த பிரபஞ்சம் அனைத்தும், ராசிமண்டலங்களுக்குள் வருகிறது. ராசிமண்டலத்திற்குள் வருகின்ற அனைத்தும், கிரகங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றன. அவை, பல வடிவத்தில் இருந்தாலும், வண்ணங்களின் வடிவிலும் உள்ளன என்பது மிகையில்லை, அவை உண்மையே.

மீனம்: காலபுருஷனின் பன்னிரண்டாவது ராசியாக உள்ள மீனத்தில், வியாழன் அதிபதியாக உள்ளார். இந்த வீட்டின் பஞ்சபூதத் தத்துவம் நீராக உருவெடுக்கிறது. மீனராசிக்கு இரண்டாம் அதிபதி யாகவும் (2ம்), ஒன்பதாம் அதிபதி யாகவும் (9ம்) மேஷம் மற்றும் விருச்சிக ராசிகள் வருகின்றன. தனம் சுபிட்ஷம் எல்லாம் இந்த ராசிக்கு சிறப்பாகவே உள்ளது. இவர்களுக்கு, சிவப்பு நிற வண்ணமும், முருகனின் அருளும் உள்ளது என்றே பொருள்படுகிறது. ஆனால், அதிகமாக சிவப்பு பயன்படுத்தும் போது சில நேரங்களில், சைனஸ் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மீனத்திற்கு மூன்றாம் பாவகமாக ரிஷபமும் (3ம்) எட்டாம் பாவகமாக (8ம்) துலாம் ராசியும் வருகிறது. இந்த ராசியின் அதிபதி, சுக்கிரனாக வருகிறார். இவருக்கு உரிய வண்ணம் பிங்க் என்ற இளஞ்சிவப்பு ஆகும். சுக்கிரன் எட்டாம் பாவத்திற்கு கோட்சாரத்தில் பிரவேசிக்கும் காலத்தில், நீங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்தைத் தவிர்த்தல் நலம். பொதுவாக மீனத்தின் அதிபதியான தேவகுருவிற்கும், ரிஷபம் மற்றும் துலாத்தின் அசுர குருவான சுக்கிரனுக்கும் எதிர்மறையாக இருக்கும் என்பதால், பிங்க் தவிர்த்தல் நலம் பயக்கும்.

மீனத்தின் நான்காம் அதிபதி யாகவும் (4ம்) ஏழாம் அதிபதியாகவும் (7ம்) புதன் இருக்கிறார். இவருக்குரிய வண்ணம் பச்சையாக உள்ளது. ஆகவே, பச்சை சிறந்த வண்ணமாக இவர்களுக்கு உள்ளது. இரு கேந்திரங்களுக்கு அதிபதியான பச்சை, வளத்தையும் வளர்ச்சியையும் தருகிறது. பச்சை வண்ணம் நன்மை செய்வதாக உள்ளது. இதில், இரண்டு ராசிகளும் காற்று ராசியாகவும் நில ராசியாகவும் வருகிறது. இவை இரட்டைத் தன்மை உள்ளதால், செல்வத்தன்மை அதிகம் பெருகுவதாக உள்ளது. பச்சை வண்ணத்தைக் கொண்ட ஏதேனும் பொருட்களை வாகனத்திலும் வீட்டிலும் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். பொது நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும், பலருடன் உரையாடவோ வேறு ஏதேனும் நிகழ்வுகளுக்குச் செல்லும்போது, பச்சை வண்ணம் உடைய சிறிய டிசைன்களையோ, கைக்குட்டையாக வைத்துக்கொள்வது நலம் பயக்கும்.

கேந்திரஸ்தானங்கள் என்பதால், பொது வெளியில் சமயோசித சிந்தனையை உருவாக்கும். மீனத்திற்கு ஐந்தாம் அதிபதியாக கடகம் வருகிறது. இதன் வண்ணம் வெண்மையாக உள்ளதால். வெண்மையான வண்ணம் உங்களுக்கு நற்சிந்தனையை கொடுப்பதாக உள்ளது. குலதெய்வம் கோயில் செல்லும்போது இந்த வண்ணம் அதிகம் பயன்படுத்துங்கள், உங்களுக்கான அருள் உண்டாகும்.

மீனத்திற்கு ஆறாம் அதிபதியாக (6ம்) சிம்மம் வருகிறது. இதன் அதிபதி சூரியன். இவர் குருவிற்கு நட்பாகவே இருக்கிறார். ஆறாம் அதிபதியாக இருந்தாலும், ஆரஞ்சு வண்ணத்தை தொழில் ஸ்தாபனங்களுக்கு நீங்கள் பயன்
படுத்தும்போது மேன்மை உண்டாகும். மீனத்திற்கு பன்னிரண்டாம் அதிபதியாகவும் (12ம்) பதினொராம் அதிபதியாகவும் (11ம்) மகரம் மற்றும் கும்பராசிகள் வருகிறது. இதன் அதிபதி சனி பகவானாக உள்ளார். ஆகவே, வெளிநாடு யோகம் உங்களுக்கு இருந்தால், லாபகரமானதாகவே இருக்கும். எனவே, விரயம் அதிகம் செய்து, லாபம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால், செய்ய வேண்டாம். இக்காலகட்டத்தில், விரயஸ்தானம் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். சனிக்கிழமை தோறும் அன்னதானம் உங்களுக்கு மிகுந்த சிறப்பை உண்டாக்கும். நீலத்தை தவிர்த்தல், நலம் பயக்கும். பத்தாம் அதிபதியாக (10ம்) தனுசில் வியாழன் வருவதால்… தொழில் ஸ்தாபனத்தில் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் உங்களுக்கு வளர்ச்சியை தரும்.

நமக்கு வண்ணம் வழி சொல்லும். நம்பினால் முன்னேற்றத்தில் நம் வாழ்வு செல்லும். வண்ணங்கள் வழிகாட்டும். இந்த வண்ணங்களை நீங்கள் எந்த முறையிலும் பயன்படுத்தலாம். ரிப்பன்களாக, கையில் கட்டிக்கொள்ளும் கங்கணக் கயிறுகளாக, தோலில் போர்த்திக் கொள்ளும் சால்வைகளாக, உலோகங்களாக, ரத்தினக்கற்களாக, இன்னும் பலவழிகளில் மேன்மைபடுத்திக் கொள்ளப் பயன்படுத்தலாம்.

The post வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags : Earth ,Dinakaran ,
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...