×

அதிமுக மாஜி நிர்வாகி அந்தர் பல்டி நடிகையை பற்றி தவறா பேசல… யாரோ மிமிக்ரி செஞ்சிட்டாங்க: ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல் அளிப்பதால் சர்ச்சை

சேலம்: நடிகையை நான் தவறாக பேசவில்லை. என்னை போல யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளதாக மாஜி அதிமுக நிர்வாகி அந்தர் பல்டி அடித்து உள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீது பல்வேறு குற்றச்சாட்டை கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏவி.ராஜூவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த ஏவி.ராஜூ, ‘எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடி பணம் இருக்கிறது. அவரது பினாமியாக வெங்கடாசலம் இருக்கிறார். கூவத்தூரில் மாவட்ட செயலாளர் ஒருவர் குறிப்பிட்ட நடிகை தான் வேண்டும் என அடம் பிடித்தார். அங்கிருந்த நடிகர் ஒருவர் தான் நடிகையை ஏற்பாடு செய்தார். இதற்காக ரூ.25 லட்சம் கொடுத்து அழைத்து வந்ததாக தெரிவித்தார். இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது நடிகர், நடிகைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவில், `சம்பந்தப்பட்ட நபர் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்டவல்லுனர்கள் மேற்கொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏ.வி.ராஜூ மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். அதில், ‘எந்த இடத்திலும் அந்த நடிகையை நான் சொல்லவில்லை. அந்த நடிகை போன்று ஒருவர் வேண்டும் என்றுதான் சொன்னேன். இதை தவறாக சித்தரித்து காட்டியுள்ளனர். ஒருவேளை உங்களது மனது புண்படும்படியாக இருந்திருந்தால் எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஏ.வி.ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், `நான் அந்த நடிகையை தவறாக பேசவில்லை. நான் பேசியதை யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளனர். நான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர்’ என்றார். ஆனால் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்ட அந்த நடிகை பெயரை தெளிவாகவும், அழைத்து வந்ததாக கூறிய நடிகர் பெயரையும் தெளிவாகவும் கூறி உள்ளார். நேற்று முன்தினம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஏ.வி.ராஜூ, நடிகை பற்றி சொல்லவில்லை என்று கூறியவர் நேற்று மிமிக்ரி மூலம் பரப்பிவிட்டுள்ளதாக கூறியிருப்பதால் அவரது தவறை அவர் உணரவில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. நடிகை தரப்பினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். ஓரிரு நாட்களில் போலீசில் புகார் செய்யப்படும் என கூறப்படுகிறது.

* அதிமுக மாவட்ட செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ்

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் சார்பில், ஏ.வி.ராஜூவுக்கு அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்,‘முன்னாள் எம்எல்ஏவும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெங்கடாசலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலும் ஊடக நேர்காணலில் அவர் செய்யாத அவதூறான குற்றச்சாட்டை நீங்கள் கூறியுள்ளீர்கள். வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாகவும், எனது கட்சிக்காரர் மீது கூவத்தூரில் தங்கியிருந்த நேரத்தில் நடிகை தங்கி இருந்தது போன்று பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளீர்கள். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றதாகும். இதனால் அவர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் பொய்யாகும். எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் ஊடகத்திற்கு முன்பு குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் மானநஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,’என்று கூறியுள்ளார். இந்த நோட்டீஸ் தபால் மூலமும், ஏ.வி.ராஜுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக மாஜி நிர்வாகி அந்தர் பல்டி நடிகையை பற்றி தவறா பேசல… யாரோ மிமிக்ரி செஞ்சிட்டாங்க: ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல் அளிப்பதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Andar Baldi ,Senchitanga ,Salem ,Antar Baldi ,AV Raju ,AIADMK Salem West Union ,Salem Nagar district ,Dinakaran ,
× RELATED அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை...