×

ஓவியங்கள் தான் என்னை புதுப்பிக்கும் திறவுகோல்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு கலைஞனின் திறமைகள் எல்லாமே அவன் வாழும் காலத்திலே மற்றவர்களால் தெரிந்து கொள்வதென்பது, ரசிக்கப்படுவது எல்லாமே அரிதான விஷயம். அந்த அரிதானவர்களில் ஒருவர்தான் திருச்சியை சேர்ந்த கமலா ராஜன். தன்னுடைய 83 வயதிலும் ஓவியங்களை வரைந்து கொண்டே இருக்கிறார். பள்ளி வயதில் வரையத் தொடங்கியவர் இன்னமும் வரைந்து கொண்டே இருக்கிறார். ‘என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் இந்த ஓவியங்கள்தான் என்ஆசுவாசம் அல்லது இளைப்பாறல்’ என்கிறார் அவர். அவருடைய ஓவியங்கள் குறித்து அவரிடம் பேசிய போது… ’

‘‘திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே சாவக்காடு எனும் கிராமம்தான் என் சொந்த ஊர். நான் பிறந்த காலங்களில் பெண்களை படிக்க அதிகமாக வெளிய அனுப்பமாட்டாங்க. ஆனா, என்னோட அம்மா முற்போக்கானவங்க. பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று சொன்ன பேச்சுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் என்னை படிக்க அனுமதித்தார். பல பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாத காலகட்டத்தில் என்னை படிக்க அனுப்பியதால் நான் படிப்பின் அவசியத்தை உணர்ந்து இருந்தேன்.

நன்றாக படிக்கவும் செய்தேன். அம்மா மட்டும் இல்லையென்றால் நானும், எனது சகோதரிகளும் படித்திருக்க முடியாது. பள்ளிப் பாடப்புத்தகங்களை தாண்டி எனக்கு சிறுவயதில் இருந்தே நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் உண்டு. நாளிதழ்களை படிப்பது மட்டுமில்லாமல், அதில் உள்ள ஓவியங்களை சும்மா பொழுதுபோக்கிற்காக வரையத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் வரைந்து வந்தேன். ஆனால் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓவியங்களில் நானே சின்னச்சின்ன மாற்றங்களை செய்ய துவங்கினேன். அப்ப நான் எட்டாம் வகுப்பு படித்து வந்தேன். அதில் கலை சார்ந்த ஒரு வகுப்பு இருக்கும்.

அதில் கிராஃப்ட் பொருட்கள் செய்வது மற்றும் ஓவியங்கள் வரைவது போன்றவை சொல்லித் தருவாங்க. நான் ஓவியம் வரைவதைப் பார்த்த என் ஓவிய ஆசிரியர், என்னுடைய ஓவியம் ஒன்றை அப்போதைய குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். குடியர சுத் தலைவர் என் ஓவியத்தில் அவரது கையெழுத்து போட்டு உடன் ஒரு பாராட்டு சான்றிதழும் அனுப்பி வைத்தார். அது எனக்கு மறக்க முடியாத நினைவாக இன்றும் இருக்கிறது’’ என்று கூறும் கமலா இன்றும் ஓவியங்கள் வரைவதால்
அவருக்கு மனத்திருப்தி ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

‘‘பள்ளிப் படிப்பு முடித்ததும், நான் ஆசிரியர் படிப்பினை தேர்வு செய்து படிச்சேன். படிப்பு முடிந்ததும், திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை நகர்ந்தது. என் கணவர் ராஜன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எனக்கு புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும் என்பதால், என் கணவர் எனக்கு நிறைய புத்தகங்களை படிக்க கொண்டு வந்து தருவார். நானும் என் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்த பிறகு கிடைக்கும் நேரத்தில் புத்தகங்களை வாசிப்ேபன்.

அந்த புத்தகங்களில் ரஷ்ய நூல்களும், இதழ்களும் இருக்கும். அதில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாமே நாம் பார்த்திராத காட்சிகளாக இருக்கும். எனக்கு ஏற்கனவே புத்தகங்களில் உள்ள படங்களை பார்த்து வரையும் பழக்கம் இருந்ததால், நான் இந்த ரஷ்ய புத்தகங்களில் இருக்கும் புகைப்படங்களையும் நேரம் கிடைக்கும் போது வரைவேன். அவை வெளிநாட்டு பாணியில் இருக்கும் என்பதால், அதனை நம்மூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ப மாற்றி வரைந்தால் என்ன என்று தோன்றியது.

அதனை என்னுடைய கற்பனைக்கு ஏற்ப மாற்றி வரைவேன். ஓவியம் வரைவது, இசை கேட்பது, பாடல்கள் பாடுவது, புத்தகம் படிப்பது என இப்படித்தான் என் ஓய்வு நேரங்கள் இருக்கும். நானாகவே எவ்வளவு காலம் வரைவது. முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, ஆயில் மற்றும் வாட்டர் கலர் பெயின்டிங்கற்றுக் கொண்டேன். அதைப் பார்த்த என் கணவர் மேலும் ஓவியங்கள் குறித்து நிறைய கற்றுக்கொள் என்று சொல்லி ஊக்குவித்தார். 60 வயதில் தஞ்சாவூர் ஓவியங்களை முறையாகப் பயின்றேன். இதனுடன் தையல், எம்பிராய்டரி, கிளாஸ் பெயின்டிங், கலம்காரி, நிப் பெயின்டிங் என பல கலைகளை கற்றுக் கொண்டேன்.

ரவிவர்மாவின் ஓவியங்களையும் வரைய பழகினேன்’’ என்றவர் ஓவியங்களின் அமைப்பு குறித்து விவரித்தார். ‘‘தஞ்சாவூர் ஓவியங்கள் பொதுவாக கோடுகளாகவும் குண்டான முக அமைப்பும் கொண்டவையாக இருக்கும். நான் வாட்டர் கலரிங் செய்வதால், வழக்கமாக வரையும் தஞ்சாவூர் ஓவியங்களை மாற்றி அழகான முகத்தை கொண்டு வந்தேன். ஒரு ஓவியத்திற்கு முக அமைப்புதான் மிகவும் முக்கியம். அதில் முக்கியமாக கடவுள் உருவங்களை வரையும் போது நகைகளை துல்லியமாக அலங்கரித்தால்தான் அந்த ஓவியம் அழகாக இருக்கும். அதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும், நான் ஓவியங்கள் வரைய உட்கார்ந்தாலே எனக்கு நேரம் போவது தெரியாது.

என் மகனுக்கு ஆண்டாள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்காக ஆண்டாள் ஓவியம் ஒன்றை வரைந்து கொடுத்தேன். அந்த ஓவியத்தின் முகத்தினை வடிவமைத்த பிறகு பார்க்கும் போது அவ்வளவு அழகாகவும் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருந்தது. எனக்கே நான் வரைந்த அந்த ஓவியம் ரொம்ப பிடித்து போனது. என் மகன் அதைப் பார்த்து ரொம்ப நெகிழ்ந்து போனான். உடனே அந்த ஓவியத்தை ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் சன்னதிக்கு எடுத்து சென்று ஆண்டாள் பாதத்தில் வைத்து பூஜை செய்தான். அன்று முழுவதும் என் ஓவியம் ஆண்டாள் சன்னதியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.

நான் வரையும் ஓவியங்களை விற்பதில்லை. நண்பர்கள், உறவினர்களுக்கு அன்பளிப்பாகத்தான் கொடுத்து வருகிறேன். என் வீடு முழுக்க ஓவியங்களாகத்தான் இருக்கும். நான் இதுவரை வரைந்த ஓவியங்களை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக என் மகன் நான் வரைந்த 68 படங்களை வைத்து 2016-ம் ஆண்டு ஓவியக் கண்காட்சி நடத்தினார். அந்த கண்காட்சி மூலம் என்னுடைய 76 ஆண்டுகால ஓவியங்கள் அனைத்தும் வெளியுலகிற்கு தெரிய வந்தது.

நான் வரைந்த இந்த ஓவியங்களுக்கு பின் பல கதைகள் அடங்கி இருக்கிறது. அதனை இந்த கண்காட்சி மூலம் வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒருவரின் அக உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளலாமே தவிர பார்க்க முடியாது. என் அக உலகத்தில் உருவானவை இந்த ஓவியங்கள். நான் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு இவை. அதனால்தான் எனக்கு எப்போதும் ஓவியங்கள் வரையும் போது மனசு அவ்வளவு திருப்தியாக இருக்கும்.

இந்த வயதிலும் என்னை உயிர்ப்போடும் சந்தோஷத்தோடும் வைத்திருப்பது என் ஓவியங்கள்தான். ஒவ்வொரு ஓவியங்கள் வரையும் போதும் நான் என்னை புதுப்பித்துக் கொள்வதாக உணர்கிறேன். வீடு, அலுவலகம் என்று நேரமே இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் நான் ெசால்வது ஒன்றுதான். உங்களுக்காக சில மணி நேரங்கள் ஒதுக்குங்கள். திறமைகளை உங்களுக்குள் ஒளித்துக் கொள்ளாமல் புதிதாக கற்றுக்கொள்ளுங்கள். புதுப்புது கலைகளின் வழியாகத்தான் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியும்’’ என்று கூறும் கமலா ராஜன் புதுக்கவிதை, மரபுக் கவிதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post ஓவியங்கள் தான் என்னை புதுப்பிக்கும் திறவுகோல்! appeared first on Dinakaran.

Tags : Kamala Rajan ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...