×

கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!

நன்றி குங்குமம் தோழி

பழங்காலத்தில் மண்ணில் அடுப்பு செய்து அதற்குள் தீ மூட்டிச் சமையல் செய்து வந்தோம். அப்படிச் சமைக்கும் போது அதிலிருந்து வெளிவரும் புகை மற்றும் கண் எரிச்சல், காற்று மாசுபாடு போன்ற பல விஷயங்களால் காலப்போக்கில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதானது. அடுத்து மண்ணெண்ணெயில் எரியும் அடுப்பினை தயாரித்து அதில் சமைத்தோம். அதுவும் காலப் போக்கில் மாற அடுத்து வந்தது தான் கேஸ் அடுப்பு.

பயன்படுத்த எளிமையாகவும் குறைவான நேரத்தில் சமைக்கிற வகையிலும், புகை வராத காரணங்களாலும் இந்த கேஸ் அடுப்புகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் சரியாக பராமரிக்காமலும் கவனக்குறைவாக இருந்தால் கேஸ் வெடித்துவிடும். ஆனாலும் வேறு வழியில்லாமல் இதைத்தான் பயன்படுத்தி வந்தோம். தற்போது இதற்கும் ஒரு மாற்று வந்துவிட்டது. அதுதான் நம்முடைய பழைய முறையான விறகு அடுப்பில் சமைப்பது.

தற்போதைய நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி புதுமையான வடிவத்தில் விறகு அடுப்பினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த ‘மீனாட்சி இயற்கை அடுப்பு கடை’யின் நிறுவனர் சதீஷ்.‘‘எல்லோரும் தற்போது கேஸ் அடுப்புகளை பயன்படுத்திப் பழகிவிட்டோம். அதே நேரத்தில் இந்த அடுப்புகள் வெடித்தாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதையும் தாண்டி மக்களுடைய பெரிய பிரச்னையாக இருப்பது எதுவென்றால் கேஸ் அடுப்பின் விலையேற்றம். இதனால் பல நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மக்கள் இந்த விலையேற்றத்தால் திரும்பவும் விறகிலேயே சமைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு எங்களின் விறகு அடுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அடுப்பு குறித்து மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை.

ஆனால் இந்த அடுப்பு ஏற்கனவே பல மாவட்டங்களில் விற்பனையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் நாங்கள்தான் முதன் முதலாக இதை அறிமுகம் செய்துள்ளோம். இந்த அடுப்பு இரும்பால் செய்யப்பட்டது. இந்த அடுப்பில் விறகு வைக்கும் இடத்திற்குக் கீழே காற்றை வெளியேற்றும் ஃபேன் போன்ற அமைப்பு ஒன்றுள்ளது. இந்த ஃபேன் பேட்டரி மூலம் இயங்கும். பேட்டரி இயங்க மின்சாரம் தேவைப்படும். சாதாரணமாக நாம் ஃபேனிற்கு கொடுக்கும் மின்சாரத்தைதான் இந்த அடுப்பினை எரிக்கவும் பயன்படுத்துவோம். இந்த ஃபேன் வெளியே இருக்கும் காற்றை இழுத்து அடுப்பிற்குள் கொடுக்கும். நாம் இந்த பேட்டரியை தொட்டாலும் நமக்கு ஷாக் அடிக்காது.

அந்த அளவிற்குக் குறைவான மின்சாரத்தைத்தான் இந்த அடுப்பிற்கு கொடுப்போம். ஃபேனிலிருந்து வெளிவரும் காற்றின் அளவை நாம் ஏற்ற, இறக்கமாக மாற்றிக் கொள்ளலாம். இதை மாற்றுவதால் தீயின் எரியும் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதில் காற்று தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் புகை என்பதே இதிலிருந்து வெளிவராது. நெருப்பு பற்ற வைத்த முதல் 10 நிமிடங்களுக்கு மட்டுமே புகை வரும். அதன் பின்னர் வெளிவராது’’ என்றவர் விறகு அடுப்பில் சமைப்பதால் வரும் நன்மைகள் குறித்துப் பேசத் தொடங்கினார்.

‘‘முதலில் விறகு அடுப்பில் சமைத்தால் அதில் செய்கிற உணவு ருசியாக இருக்கும். அதோடு அதைப் பதமாகவும் கொண்டு வரலாம். விறகு அடுப்பில் செய்யக்கூடிய உணவுகள் சீக்கிரம் செரிமானம் ஆகி விடும். இன்றுள்ள பலருக்கும் முக்கிய பிரச்னையே செரிமான ஆகாததுதான். விறகு அடுப்பில் சமைத்தாலே இந்தப் பிரச்னைகள் குறைந்துவிடும். இந்த அடுப்பிற்கு குறைவான விறகுகளே தேவை என்றாலும் அதைக் கொண்டு மாதம் முழுவதும் சமைத்து விடலாம்.

நாம் இன்று கேஸ் அடுப்பிற்குக் கொடுக்கும் பாதி பணம் மட்டுமே இந்த அடுப்பினை பயன்படுத்தச் செலவு ஆகும். இந்த அடுப்பு மிகவும் பாதுகாப்பானதும் கூட. நாம் மின்சாரம் மூலம் பேட்டரியை இயங்க செய்வதால், பாதிப்பு ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். காரணம், மின்சாரம் பேட்டரி வழியாக வரும் போது குறைவான அளவே வரும். அதனால் தீ பற்ற வாய்ப்புகள் இல்லை. எல்லாவற்றையும் விட சமையலும் சீக்கிரமாக செய்து முடித்துவிடலாம்.

சொல்லப்போனால் ஒரு உணவினை கேஸ் அடுப்பில் செய்யும் நேரத்தை விட இதில் குறைவான நேரமே ஆகும். நம்முடைய முன்னோர்களின் வழியைச் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்து பின்பற்றினாலே போதும். நம்முடைய பாதி பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிடைத்து விடும். மக்களும் இப்போது இந்த விறகு அடுப்பினை விரும்பி வாங்குகின்றனர்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் சதீஷ்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED சக்கர நாற்காலியில் எழுந்து நிற்கலாம்!