×

ஆரணி தாலுகா அலுவலக பதிவறையில் அரசு ஆவணங்களில் தகவல்களை மாற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள்

*இணையத்தில் வீடியோ வைரல்

ஆரணி : ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவறையில் அரசு ஆவணங்களில் தகவல்களை ஓய்வு பெற்ற அதிகாரிகள் மாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பகுதியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக முதல் மாடியில் உள்ள பதிவறையில் ஆரணி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சொத்துகள், விவசாய நிலங்கள், நத்தம் புறம்போக்கு, அரசு இடங்கள் உள்ளிட்டவைகளின் ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த சில மாதங்களாக பதிவறைக்குள் பகல், இரவு நேரங்களில் ஓய்வுபெற்ற சர்வேயர்கள், விஏஓக்கள், கிராம உதவியாளர்கள் சிலர் அனுமதியின்றி சென்று, ஆவணங்கள் கோப்புகளை எடுத்து திருத்தம் செய்து, கிராம வருவாய் கணக்கிலும் திருத்தம் செய்வதும், கோப்புகளில் முக்கிய பேப்பரை வரைபடத்தில் இருந்து கிழித்து எடுத்துச் சென்று, நில உரிமையாளர்கள் அனுமதியின்றி சப்டிவிஷன் செய்து, கூட்டுபட்டா உருவாக்குவது, அரசு புறம்போக்கு இடங்களை பட்டா மாற்றிக் கொடுப்பது உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சிலதினங்களுக்கு முன்பு பதிவு அறையில் ஓய்வு பெற்ற சர்வேயர் ஒருவர் 3 பேருடன் அரசு கோப்புகளில் உள்ள ஆவணங்களை எடுத்து வரைப்படத்தில் திருத்தம், செய்வது குறித்து வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதேபோல், கடந்த 18ம் தேதியன்று ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவருக்கு சாதகமாக அரசு ஆவணங்கள், கோப்புகளில் வண்ணகலர் பேனாக்களில் திருத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவறையில் தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், ரெக்கார்ட் கிளார்க் ஆகியோர் மட்டுமே, அனுமதியுடன் சென்று பணி மேற்கொள்வது வழக்கம். ஆனால், அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் இதுபோன்று செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, சதுப்பேரிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி தாசில்தாரிடம் இருதினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகார் கலெக்டர், டிர்டிஓவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில் பதிவுத்துறை கிளார்க் திருமுருகன் நேற்றுமுன்தினம் வந்தவாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், தாலுகா அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கிளார்க்கிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆரணி தாலுகா அலுவலக பதிவறையில் அரசு ஆவணங்களில் தகவல்களை மாற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Arani Taluk Office Registry ,Arani ,Arani Taluk ,taluk ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...