ஆரணி, ஜூலை 6: ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்று நகராட்சி ஆணையாளர் திடீரென ஆய்வு செய்தார். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. மேலும், இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் விஏகே நகர் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி, தச்சூர் செய்யாற்றுப்படுகை மற்றும் ஆற்காடு பாலாறு ஆகிய பகுதிதகளில் இருந்து தினமும் குடிநீர் பைப் லைன் மூலம் கொண்டுவரப்பட்டு நகராட்சி வளாகத்தில் உள்ள மேல்நீர் தேக்க தொட்டியில் சேகரித்து, அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட வார்டு 24ல் உள்ள சபியுல்லா தெருவில் சில தினங்களாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வருவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளருக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆணையாளர் சரவணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் வடிவேல், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரி செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நீர் தேக்க தொட்டியில் இருக்கும் தண்ணீரில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணூயிரிகளை அழிக்க குளோரின் தண்ணீரில் சேர்க்கப்பட்டு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு வார்டுகளுக்கு ஆணையாளர் சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மேல்நீர்தேக்க தொட்டியில் சேகரித்து வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் மேல்நீர்தேக்க தொட்டியில் 2 பிபிசி ஆகவும், தெருக்குழாய்களில் 0.5 பிபிஎம் ஆகவும் குளோரின் சரியான அளவு கலந்து குளோரினேஷன் செய்து குடிநீர் வழங்கப்படுகிறதாக என வீடுகளிலும், தெருக் குழாய்களிலும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சுத்தமான பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறைகள் வழங்கினார். அப்போது, மேற்பார்வையாளர் பிரதாப், குமார் உட்பட நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.
The post குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா? நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் appeared first on Dinakaran.