×

எடப்பாடி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்

சென்னை: சென்னை பசுமைவழிசாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். இதையடுத்து அவரை பாதுகாவலர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடர் நடந்து வருகிறது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேரவையில் கலந்து கொண்டுவிட்டு, பசுமை வழி சாலையில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றார். கார் வீட்டின் கேட்டிற்குள் சென்றதும், அங்கு இருந்த மர்ம நபர் பாதுகாவலர்களை தாண்டி அத்துமீறி உள்ளே புகுந்து எடப்பாடியிடம் பேச முயனறார்.

அப்போது பின்னால் பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் இருந்து காவலர்கள் இறங்கி அந்த மர்ம நபரை பிடித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் மதுரையை சேர்ந்த வெங்கடேசன்(28) என்றும், தனது ஊரில் கட்டப்படும் கோயிலுக்கு எடப்பாடியை சந்தித்து நிதி பெற வந்ததாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் அத்துமீறி எதிர்க்கட்சி தலைவர் வீட்டிற்குள் சென்றதால், பின்னணியில் காரணம் ஏதேனும் உள்ளதா என போலீசார் தொடர்ந்து வெங்கடேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post எடப்பாடி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் appeared first on Dinakaran.

Tags : Edappadi house ,Chennai ,Edappadi Palaniswami ,Greenway, Chennai ,Tamil Nadu Legislative Assembly ,AIADMK ,General Secretary ,Edappadi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால்...