×

முடுலிகாடியா கிராமமும் அறியாத தகவல்களும்!

நன்றி குங்குமம் தோழி

ஒடிசா, மகாநதி அருகே நயாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் முடுலிகாடியா. ரம்மியமான சூழலிலும் சுற்றுலாவிற்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ள இந்தக் கிராமம் மற்ற மாவட்டங்களுக்கு பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் தொடங்கிய 2 ஆண்டுகளில் இந்தக் கிராமம் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் இதை செயல்படுத்தி காட்டிஉள்ளனர் இந்தப் பகுதி மக்களும் வன விலங்கு துறை அதிகாரியான அன்ஷுவும். இவர் தன்னுடைய அர்ப்பணிப்பால் இந்தக் கிராமத்தை மிகச் சிறப்பானதாக மாற்றியுள்ளார்.

உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வனப் பாதுகாப்பினை மேம்படுத்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக மணலில் கூடாரங்கள் அமைப்பது, வீடுகளைச் சுற்றி அழகிய சுவரோவியங்கள் தீட்டுவது என அந்தப் பகுதி மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அத்துடன் கிராமத்தின் மாநில வனத்துறையின் உதவியுடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு(EDC) ஒன்றினை நிறுவியுள்ளது. இன்று இங்கு வசிக்கும் 35 குடும்பங்களும் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் காற்று மாசுபாடு பெருமளவிற்கு குறைந்துள்ளது.

கிராமத்தில் உள்ள மரங்கள், சாலைகள் மற்றும் இதர பொது இடங்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வனத்துறை அதிகாரி அன்ஷுவின் தலைமையில் கிராம மக்களைக் கொண்டு அமைத்துள்ளனர். திறந்தவெளி கழிப்பிடங்களை மாற்றி கிராம மக்களுக்கு கழிப்பறை அமைத்தனர். ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள், தண்ணீர் வசதிக்கும் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களுக்கு ஆதரவளித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் காரணமாக கிராம மக்களின் வாழ்க்கை முறை பெருமளவிற்கு மேம்பட்டுள்ளது என்கிறார்கள் இப்பகுதி கிராமவாசிகள்.

தற்போது இந்த சுற்றுச் சூழல் இயற்கை சுற்றுலா உள்ளூர் மக்களுக்கு கணிசமான வருவாய் ஈட்டித் தர ஆரம்பித்துள்ளது. வாழ்வாதாரத்திற்கு வனத்தில் உள்ள பொருட்களைச் சார்ந்திருந்த நிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. சுற்றுலா மூலம் ஈட்டப்படும் ஒட்டுமொத்த வருவாயில் 80% ஊதியமாக அந்த சமூகத்திற்கே திருப்பியளிக்கப்படுகிறது. மீதமுள்ள 20% சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் பணிகளில் முதலீடு செய்யப்படுகிறது.இந்தியாவிலுள்ள இயற்கை எழில் மிகுந்த கிராமப் பகுதிகள் இவ்வாறு மாறினால் அதனால் அப்பகுதி மக்களும் சுற்றுலாத்துறையும் மிகச்சிறப்பான வளர்ச்சியை பெறும் என்பதற்கு இவர்களே எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன், சென்னை.

The post முடுலிகாடியா கிராமமும் அறியாத தகவல்களும்! appeared first on Dinakaran.

Tags : Muduligadia ,Nyagar district ,Mahanadi, Odisha ,Dinakaran ,
× RELATED கனவு மெய்ப்பட வேண்டும்!