×

கேட்டு, கேட்டு ஓய்ந்த எம்பிக்கள் 10 ஆண்டுகால ஆட்சி முடியப்போகுது கேந்திரிய வித்யாலயா பள்ளி எப்பங்க வரும் விழுப்புரத்தை புறக்கணித்த ஒன்றியஅரசு

விழுப்புரம், பிப். 20: விழுப்புரம் மாவட்டத்துக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வரவேண்டுமென்று எம்பிக்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு புறந்தள்ளி வருவது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்துக்கான திட்டங்களும், எம்பிக்களின் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரித்து வருகின்றன. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பதைபோல், வடமாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் திட்டங்கள் மலைபோலும், தென்மாநிலங்களான தமிழகத்துக்கு கிள்ளி கொடுப்பதை போலவும் இருந்து வருகின்றன. ரயில்வே திட்டங்களானாலும், வேலை வாய்ப்பு தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள் என அனைத்திலும் பாரபட்சத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக எம்பிக்கள், அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மதுரையில் எய்ம்ஸ் தொடங்கப்போவதாக அறிவித்த ஒன்றிய அரசு ஒரே செங்கல்லை வைத்ததோடு சரி என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்கள், மக்களவை தொகுதிகளுக்கு எம்பிக்கள் வைக்கின்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனிடையே கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டுமென்று ஒன்றிய பாஜக ஆட்சிக்கு வந்தநாள் முதல் தொடர்ந்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பிக்களாக இருந்தவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் மட்டும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளன. ஒன்றிய அரசின் மனிதவளத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளிகளுக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால் கல்வி கட்டணம் குறைவு. அதுவும் ஒன்றிய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க வேண்டுமென கடந்த முறை எம்பியாக இருந்த அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் இந்த கோரிக்கையை மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.

தொடர்ந்து இந்த பள்ளி துவங்குவதற்காக கண்டமங்கலம், விக்கிரவாண்டி பகுதியில் இடம் தேர்வும் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதோடு இந்த முடிவை கிடப்பில் போட்டு விழுப்புரம் மக்களவை தொகுதியை ஒன்றிய அரசு வஞ்சித்துவிட்டது. அதன்பிறகு வந்த தற்போதைய எம்பி ரவிக்குமாரும், கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க வலியுறுத்தினார். ஆனால் ஒன்றிய அரசு பாராமுகத்துடன் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை புறக்கணித்து வருகிறது. தொடர்ந்து இந்த மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஒன்றியஅரசு அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களது தரப்பிலும் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க கேந்திரிய வித்யாலயா பள்ளியை துவங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தினர். ஆனால் யார் கோரிக்கையையும் ஏற்க மறுத்த ஒன்றிய அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சியில் நடந்த பாதயாத்திரையில், தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை கொண்டு வருவதுதான் பாஜகவின் இலக்கு என்று கூறி பிரசாரம் செய்தார். ஆனால் 10 ஆண்டு காலமாக எம்பிக்கள் மக்களவையில் வலியுறுத்தியும், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர், ஒன்றிய அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரையில் அதற்கான பரசீலனை கூட செய்யாத ஒன்றிய அரசு தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது அண்ணாமலை மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியை கொண்டு வருவதாக கூறியிருக்கிறார் என்று குற்றம்சாட்டி வருகின்றனர். மாவட்டத்தின் சார்பில் ஒட்டு மொத்த கோரிக்கையாக வைக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி எப்பங்க வரும் என்று தேர்தல் நேரத்தில் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். இதற்கு முடிவு சொல்லாவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் பாஜக அவர்களுடன் கூட்டணி சேரும் கட்சி வேட்பாளர்களுக்கு ஒத்த ஓட்டைகூட போடமாட்டோம் என்று ஆசேவம் தெரிவித்துள்ளனர் விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்காளர்கள்.

97 வருஷமா இயங்கிய ரயில்வே பள்ளியை இழுத்து மூடிய ஒன்றிய அரசு…
விழுப்புரத்துக்கு ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவரும் நிலையில் 97 வருடமாக செயல்பட்டு வந்த ரயில்வே பள்ளியை இழுத்து மூடியுள்ளது ஒன்றிய அரசு. கடந்த 1924ம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் தொடங்கப்பட்டு பல துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்கிய பாரம்பரிய மிக்க பள்ளியாக ரயில்வே உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக பள்ளியில் சேர விரும்பிய மாணவர்களுக்கு எந்தவொரு சேர்க்கையும் நடைபெறவில்லை. ஒவ்வொரு வருடமும், படிப்படியாக வகுப்புகளை மூடிவிட்டனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியை முழுமையாக இழுத்து மூடிய ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் பெரியபூட்டை போட்டு மக்களின் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இந்த பள்ளி தான் சந்திராயன் – 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை உருவாக்கியது. இவரை போன்ற பல சாதனையாளர்களை உருவாக்கிய இந்த பள்ளிக்கு ஒன்றிய அரசு மூடுவிழா கண்டுள்ளது.

The post கேட்டு, கேட்டு ஓய்ந்த எம்பிக்கள் 10 ஆண்டுகால ஆட்சி முடியப்போகுது கேந்திரிய வித்யாலயா பள்ளி எப்பங்க வரும் விழுப்புரத்தை புறக்கணித்த ஒன்றியஅரசு appeared first on Dinakaran.

Tags : union government ,Villupuram ,Kendriya Vidyalaya school ,government ,Union BJP Government ,Tamil Nadu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...