×

அனைத்து மாநகராட்சியிலும் 1000 இடங்களில் இலவச வைபை: கோவையில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா

கோயம்புத்தூரில் ரூ.1,100 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் பல்வேறு துறைத் தலைமை அலுவலகங்களுக்கும் சார்பு அலுவலகங்களுக்கும் தேவையான மென்பொருட்கள் மற்றும் கணினிகள் வழங்கவும், அலுவலர்களுக்கு உரிய திறன்பயிற்சி அளித்து மின் அலுவலகத் திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 கோடி 2024-25ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுசார் இணையவழிச் சேவைகளை மேலும் துரிதமாக அளித்திடும் வகையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் பேரிடர் தரவு மீட்பு வசதிகளுடன் கூடிய மேகக் கணினியக் கட்டமைப்பு கொண்டதாக மாநிலத் தரவு மையம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் தரம் உயர்த்தப்படும். இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தை மேலும் பரவலாக்கும் வகையில், சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும்.

தகவல் நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளும் இணைந்திட வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் ரூ.350 கோடியில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலும், திருச்சியில் ரூ.345 கோடியில் 6 லட்சத்து 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல், விண்வெளி பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர்தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, 20லட்சம் சதுரஅடியில், இரண்டு கட்டங்களாக ரூ.1,100 கோடியில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும்.

* பூந்தமல்லி அருகே நவீன தொழில்நுட்பங்களுடன் ரூ.500 கோடியில் புதிய படப்பிடிப்புத் தளம்

பூந்தமல்லி அருகே 150 ஏக்கரில் ரூ.500 கோடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய படப்பிடிப்புத் தளம் அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என்று தமிழக பட்ெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகள் அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

* நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ சாலைகள் ரூ.2,500 கோடியில் புதுப்பிக்கப்படும்

2024-25ம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ சாலைகள் ரூ. 2,500 கோடியில் புதிப்பிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 1,328 கோடி மதிப்பிலான பணிகள் முடிவுற்று ரூ. 1,659 கோடியிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினைச் செயல்படுத்திட வரும் நிதியாண்டில் ரூ.1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அம்ருத் 2.0 திட்டத்தில், ரூ.4,942 கோடி ஒன்றிய அரசு பங்களிப்புடனும் ரூ.9,047 கோடி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-25ம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.2,500 கோடியில் புதுப்பிக்கப்படும்.

* அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம்

ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவியர் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம். இந்த திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவிதம் அதிகரித்து கூடுதலாக 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் உள்ள நதிகளை மீட்டெடுத்து சீரமைக்கும் திட்டம்: ரூ.1500 கோடியில் செயல்படுத்தப்படும்

சென்னையில் உள்ள நதிகளை மீட்டெடுத்து சீரமைப்பதற்கான திட்டம் ரூ,1500 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதி நிலை அறியில் கூறியிருப்பதாவது: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.1,500 கோடியில் மேற்கொள்ளப்படும்.

அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் 70 கி.மீ தூரத்திற்கு கழிவுநீர்க் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது, நாள் ஒன்றிற்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் நான்கு பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நதிக்கரை நெடுக பசுமைப் பரப்புகளை அதிகரிப்பது போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலகட்டத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும். சைதாப்பேட்டை முதல் திரு.வி.க. பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள்ளாகவே இப்பணிகள் முடிக்கப்படும்.

தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் வழியாகப் பாய்ந்திடும் வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு, நதிநீரை தூய்மையாகப் பராமரிக்கவும். கரையோரம் பசுமையான மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி. ஈரோடு. மற்றும் கோயம்புத்தூரில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுப் பணிகள் மற்றும் திட்ட அறிக்கை ரூ. 5 கோடியில் தயாரிக்கப்படும்.

The post அனைத்து மாநகராட்சியிலும் 1000 இடங்களில் இலவச வைபை: கோவையில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு