×

வனப்பகுதிகளில் கடும் வறட்சி எதிரொலி: நீர் நிலைகளை தேடி வரும் விலங்குகள்

 

மேட்டுப்பாளையம், பிப்.20: மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. கடந்த சில தினங்களாக கோடைக்காலம் துவங்கும் முன்னரே மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் நீர்நிலைகளை நாடி வருகின்றன.

வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் தண்ணீர் தொட்டிகளை தேடி வனவிலங்குகள் வருகை தருகின்றன. இதனால் தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘‘மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர்த்தொட்டிகள் உள்ளன.தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் அங்குள்ள குட்டைகளில் தண்ணீர் வற்றிவிட்டது.

இதனால் தண்ணீர்த்தொட்டிகளை தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தேடி வருகின்றன. தற்போது குட்டைகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாரத்தில் இரு தினங்கள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர்த்தொட்டிகளை சுத்தம் செய்து வருவதோடு,அன்றாடம் வாகனங்கள் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி அடையும்.வனவிலங்குகளும் வனப்பகுதியை விட்டு வெளியே வருவது குறையும்’’ என தெரிவித்தார்.

The post வனப்பகுதிகளில் கடும் வறட்சி எதிரொலி: நீர் நிலைகளை தேடி வரும் விலங்குகள் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...