×

பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

 

ஈரோடு,பிப்.20: பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் ஈரோட்டில் ஒரு கிலோ பூண்டு ரூ.300க்கு விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கடை வீதி மற்றும் நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு மத்தியபிரதேசம்,ராஜஸ்தான்,குஜராத், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்த நிலையில், விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானதால் இல்லத்தரசிகள், ஓட்டல் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டிற்கு வரும் பூண்டு வரத்து கடந்த 4 நாட்களாக மெல்ல உயர்ந்து வந்தது. இதன் காரணமாக விலையானது சரிய தொடங்கி உள்ளது.

ஒரு கிலோ ஊட்டி பூண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.400 வரை விற்பனையான நிலையில், நேற்று கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சீடு பூண்டு கிலோ ரூ.220க்கு விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் அறுவடை பணிகள் முடிந்து விற்பனைக்கு மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படுவதால் வரத்து அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக விலை சரிந்து வருவதாகவும், மேலும் ராஜஸ்தான், குஜராத்தில் பூண்டு அறுவடை தொடங்கியுள்ளதால் விரைவில் மேலும் விலை சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

The post பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Madhya Pradesh ,Rajasthan ,Gujarat ,Ooty ,Kodaikanal ,Erode market road ,Netaji ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...