×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனை செய்து உலக சாதனை

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை செய்து உலக சாதனை படைத்துள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மறைந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழிகாட்டுதல் படி, ஆன்மிக சேவையும், கல்வி சேவையும் செம்மையாக நடைபெற்று வருகிறது. மேலும், பெண்களை கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் ஆன்மிக புரட்சியும், பெண்கள் சுயதொழில் செய்ய பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட சாதனைகளை ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84வது பிறந்தநாள் விழாவையொட்டி, உலக நன்மைக்காக ஆதிபராசக்தி அம்மனுக்கு கோடி அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பக்தர்களும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சார்ந்த பக்தர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு குரு போற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேலாக படித்து உலக சாதனை நிகழ்த்தினர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த கோடி அர்ச்சனை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இசைப்பேரறிஞர் சீர்காழி சிவசிதம்பரம் கலந்துகொண்டு கோடி முறை அர்ச்சனை செய்யப்பட்டதை பாராட்டி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் உலகெங்கும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தர் சக்தி பீடங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும், செவ்வாடை பக்தர்கள், தொண்டர்கள் நேரிலும், இணையத்திலும் ஒருங்கிணைந்து கோடி அர்ச்சனை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனை செய்து உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Adiparashakti ,Siddhar Peedam ,Adiparashakti Chevvadai ,Bangaru Adikalar ,Siddhar Peedham ,
× RELATED ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...