×

குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகம் வடமாநில வாலிபருக்கு சரமாரி அடி, உதை: பொதுமக்களுக்கு போலீஸ் அறிவுரை

சோழிங்கநல்லூர்: எண்ணூரில் குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு வடமாநில வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  இதுபோன்று சந்தேகத்தின் பேரில் அவசரப்பட்டு யாரையும் தாக்கக்கூடாது என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். எண்ணூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம் அருகே ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவில் ஏராளமான வாலிபர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வட மாநில வாலிபர் ஒருவர் கீழே சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக், பேப்பர் போன்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.  இதை பார்த்த வாலிபர்கள் சிலர், அவர் குழந்தைகளை கடத்தி செல்பவரோ என்று சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் இந்தியில் தன்னைப் பற்றி தெரிவித்தார். அவர் பேசியதை புரிந்துகொள்ளாத வாலிபர்கள் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில், அவருக்கு முகம், உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை சமாதானம் செய்து, காயம் அடைந்த வட மாநில வாலிபரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் (36) என்பது தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வேலை தேடி வந்த மனோஜ், வேலை கிடைக்காததால் குப்பை சேகரித்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்குமாறும், அவசரப்பட்டு அடிப்பது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகம் வடமாநில வாலிபருக்கு சரமாரி அடி, உதை: பொதுமக்களுக்கு போலீஸ் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : North State ,Choshinganallur ,Uttar Pradesh ,Ennoor ,Ramanathapuram ,Ennore ,
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...