×

மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை

 

திருவொற்றியூர், பிப்.19: மணலி புதுநகரில் சேதமடைந்த கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மணலி மண்டலம், 15 வது வார்டு, மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆறு உள்ளது. மழைக்காலங்களில் பூண்டி ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர், உபரிநீர் இந்த ஆறு வழியாக வந்து மணலி புதுநகரை கடந்து எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது.

இந்நிலையில் புதுநாப்பாளையத்தில் இருந்து இடையஞ்சாவடி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு இந்த கொசஸ்தலையாற்றின் இருபுறமும் ஆங்காங்கே கரைகள் உடைந்து, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெருமழை பெய்தால், ஆற்றுநீர் இதன் வழியாக வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. இந்த ஆற்றை இருபுறமும் கரையை உயர்த்தி சீர் அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மணலி மண்டல குழு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சமூக ஆர்வலர்களும் இந்த ஆற்றை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெருமழை பெய்வதற்கு முன் இந்த கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த காலங்களில் பெருமழை பெய்யும் போது உபரி நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்பும், பொதுமக்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. இந்த பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்க அரசு மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதை அனுபவமாகக் கொண்டு தற்போது சேதமடைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என்றனர்.

The post மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kosasthalai ,Manali Pudunagar ,Thiruvottiyur ,Kosasthalai river ,Manali Mandal ,15th Ward ,Bundi Lake ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...