×

காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வடலூரில் ₹99.90 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

வடலூர், பிப். 18: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சர்வதேச மையம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். வடலூரில் சத்திய ஞான சபையில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்பி ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். இணை ஆணையர் பரணிதரன் வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொணண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், வள்ளலார் சத்திய ஞான சபை அமைக்க நிலம் வழங்கிய பார்வதிபுரம் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ரூ. 99.90 கோடியில் சர்வதேச மையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி.

இந்த சர்வதேச மையம் அமைப்பது குறித்து வல்லுனர் குழுவின் பரிந்துரைப்படி கருத்துகள் சேகரிக்கப்பட்டு பொதுமக்கள், அறிஞர்களின் கருத்துருக்கள் கேட்கப்பட்டு ஆய்வுக்கு பின்னர் வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு ரூ.99.90 கோடி அரசின் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். வேண்டுமென்றே சிலர் அரசியல் ஆக்க முடிவு செய்து வருகின்றனர். இந்த பெருவெளியில் உள்ள 72 ஏக்கரில் 3.42 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.

வள்ளலாரின் கொள்கையை உலக அளவிற்கு கொண்டு செல்ல இங்கு தியான மண்டபம், தகவல் மையம் கலையரங்கம், மின் நூலகம் முதியோர் இல்லம் கழிவறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சுவர், வெளிநாட்டு மாணவர்கள் தங்கி ஆய்வு செய்ய ஆய்வகம், முதியோர் இல்லம், கழிப்பறை வசதி, அணுகு சாலை வசதியுடன் சுற்றுச்சுவர், தர்மச்சாலை மேம்படுத்தும் பணி உட்பட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. மக்களுக்காக தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். எவ்வளவு தடை வந்தாலும் சர்வதேச மையம் அமைக்கப்படும், என்றார்.

கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் திமுக நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வடலூர் துணை தலைவர் சுப்பராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், வடலூர் வள்ளலார் சங்க வர்த்த சங்க நிர்வாகிகள் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்திய ஞான சபை செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் நன்றி கூறினார்.

பாமக எதிர்ப்பு: சத்திய ஞான சபை பெருவெளியில், சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் நேற்று சத்திய ஞானசபை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்பி ராஜாராம் தலைமையில், 3 ஏடிஎஸ்பிக்கள், 1 டிஎஸ்பி, 21 இன்ஸ்பெக்டர்கள், 45 எஸ்ஐக்கள் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வடலூரில் ₹99.90 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Mu. K. Stalin ,Vallalar ,International ,Centre ,Vadalur ,Minister of Works ,MRK ,PANNIERSELVAM ,Vallalar International Centre ,Vallalar Sathya Jana ,Sabha ,Tamil Nadu ,International Center ,Paneer Selvam ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...