×

பெரியபாளையம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை – திருப்பதி சாலையில், பெரியபாளையம் கிராமத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற பவானியம்மன் கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கார், பஸ், வேன், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இதனால், பெரியபாளையம் பகுதி பெரும் நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் பெரியபாளையம் பஜார் பகுதியிலும், ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் சாலையில் பெரியபாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தின் மீதும், மும்முனை சந்திப்பு உயர்கோபுர மின் விளக்கு அருகிலும் மாடுகள் நடுரோட்டிலேயே சுற்றித்திரிகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகிறார்கள். மேலும், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாடுகள் முட்டி விடுமோ என்ற அச்சத்துடன் செல்கிறார்கள்.

மேலும், மாடுகள் அசுத்தம் செய்து அங்கேயே தங்கி விடுவதால் பாலமும், மும்முனை சந்திப்பு பகுதியும் மாட்டு தொழுவம்போல் மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு, கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் பக்தர்கள் மீது விழுகிறது. மேலும், மாடுகள் பாலத்தின் மீது அமர்ந்து விடுவதால், பாலத்தை பயன்டுத்தக்கூடிய பாதசாரிகள் நடுரோட்டில் செல்வதால், சாலையில் செல்லும் வாகனங்கள் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பெரியபாளையம் பகுதிகளில் பகல், இரவு என்றும் பாராமல் எப்போது பார்த்தாலும் மாடுகள் சாலையிலேயே படுத்துக்கிடக்கிறது. இந்த மாடுகள் நடுரோட்டிலேயே ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு ஆட்கள் மீது விழுகிறது. மேலும், கடந்த வருடம் பெரியபாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ஒருவர் பைக்கில் சென்றபோது, குறுக்கே வந்த மாடு மீது மோதி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் அல்லது மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post பெரியபாளையம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Chennai – Tirupati road ,Chennai ,Tiruvallur ,Kanchipuram ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு