×

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது: சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தனித்தே களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்துள்ளது. வேட்பாளர் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்துக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாகவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த விவசாயி சின்னத்தை வேறு ஒருவருக்கு வேண்டுமென்றே ஒதுக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயி சின்னத்தை பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், வருகிற 20ம் தேதி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.

அதில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துக் கூறி நிச்சயம் விவசாயி சின்னத்தை பெறுவோம். புதிய சின்னம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய அறிவியல் உலகத்தில் கொண்டு சேர்க்க இயலும். நிச்சயம் விவசாய சின்னத்தை கேட்டுப் பெறுவோம். சின்னத்தை வழங்க மறுப்பது என்பது எனக்கு அழுத்தம் தரும் முயற்சி. எந்த சூழலிலும் கூட்டணி என்பது கிடையாது. தனித்து போட்டியிட்டு 7 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 0.7 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

The post நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Seeman Buddy ,Chennai ,Seeman ,Tamil Nadu ,Puduwa ,Tamil Nadu Party ,
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...