×
Saravana Stores

இரட்டிப்பு பணம் ஏமாற்றிய தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருவண்ணாமலை டவுன் தேனிமலை பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கும் திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையை சேர்ந்த பவுன்குமார் மனைவி ஜெயந்தி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. அப்போது ஜெயந்தி, தனது கணவர் பவுன்குமார் ஷேர் மார்க்கெட்டில் மீடியேட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.இதை நம்பிய மணிமேகலை மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் ஜெயந்தி மற்றும் அவரது கணவரிடம் பல தவணைகளாக ரூ.14.25 லட்சத்தை செலுத்தியுள்ளனர்.

அதன்பின்னர் ஷேர் மார்க்கெட்டில் கிடைத்த லாபம் எனக்கூறி மணிமேகலை உள்ளிட்டோரின் வங்கி கணக்கிற்கு ரூ.3.67 லட்சம் வந்துள்ளது. அதன்பிறகு மணிமேகலையின் வங்கி கணக்கிற்கு பணம் எதுவும் வரவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை, தனது பணத்தை திருப்பி கேட்டபோது, ஜெயந்தி தட்டிக்கழித்து வந்துள்ளார். இதேபோன்று ஜெயந்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அப்போது பண மோசடியில் ஈடுபட்ட ஜெயந்தி மற்றும் அவரது கணவர் பவுன்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post இரட்டிப்பு பணம் ஏமாற்றிய தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Manimegala ,Thiruvannamalai Town Thenimalai ,Baunkumar ,Jayanti ,Tiruvannamalai-Vettavalam Road ,
× RELATED இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் சென்னை வாலிபர் கைது