×

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது: வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, வன்முறை மற்றும் மோதலை தடுக்க மணிப்பூரில் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குக்கி மற்றும் மெய்தி சமூகங்களில் உள்ள ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து தாக்குதல், வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இதனிடையே, அம்மாநிலத்தின் சர்சந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்) சிம்லால்பால் தடைசெய்யப்பட்ட குக்கி ஆயுதக்குழுவினருடன் இணைந்து செயல்பட்டது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, தலைமை காவலர் சிம்லால்பாலை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். இந்நிலையில், தலைமை காவலர் சிம்லால்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அவருக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்தி குக்கி சமூகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சர்சந்த்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதையடுத்து, பதற்றம் அதிகரித்த நிலையில் போலீசார் மற்றும் அசாம் ராஷ்டிரிய ரைபில் படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டகாரர்களை விரட்டியடித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 25 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுராசந்த்பூரில் வன்முறையை கருத்தில் கொண்டு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறையைடுத்து சர்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

The post மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது: வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Manipur Surachandpur ,Cookie ,Meidi ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...