×

சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் விரைவில் மூடல்

சென்னை, பிப்.16: சென்னை பல்வேறு விஷயங்களுக்கு பெயர்போனதாக இருந்தாலும் திரையரங்குக்கு என தனி பெயர் உண்டு. குறிப்பாக சென்னையில் திரையரங்கம் என்று சொன்னால் உதயம், தேவி, கமலா, சத்தியம் போன்ற திரையரங்குகளின் பெயர் தான் மக்களின் நினைவுக்கு வரும். பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது உதயம் போன்ற திரையரங்குகளில் ரசிகர்கள் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருவார்கள்.
இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளம் அதிகரித்த காரணத்தினால் திரையரங்குக்கு ரசிகர்கள் வருவது குறைந்து விட்டது. மேலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரித்ததால் சென்னையின் அடையாளமாக இருக்கும் திரையரங்குகள் மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஏற்கனவே அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கம், வடசென்னையில் உள்ள அகஸ்தியா திரையரங்கம் உள்ளிட்ட பல திரையங்குகள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற கட்டிடங்கள் கட்டப்படுகிறது.

தற்போது ரசிகர்களின் கொண்டாட்ட தலமாக இருக்கும் உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. இது சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அசோக் நகரில் 1983ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு வளாகத்தில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என 4 திரையரங்குகள் உள்ளன. இந்த திரையகத்திற்கு என தனி சிறப்பு உண்டு. குறிப்பாக இந்த திரையரங்கம் அமைந்து இருக்கும் பகுதியான அசோக் நகர் என்று பேருந்தில் டிக்கெட் எடுப்பதை விட உதயம் திரையரங்கம் என்று தான் டிக்கெட் எடுப்பார்கள். அந்த அளவிற்கு இந்த திரையரங்கம் புகழ்பெற்றது.

அதேபோல, இந்த உதயம் திரையரங்கு குறித்து, ‘உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைத்தேன்’ என்று பாடல்கள் கூட இருக்கிறது. அந்த அளவிற்கு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக உதயம் திரையரங்கு திகழ்ந்து இருந்தது. தற்போது உதயம் திரையரங்குக்கு அருகில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்ட நிலையில், உதயம் திரையரங்கின் மவுசு குறைந்துவிட்டது. இதன் காரணமாக உதயம் திரையரங்கு வருமானம் குறைந்த நிலையில் தற்போது திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. திரையரங்கு இருக்கும் இந்த இடத்தில் அதனை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் விரைவில் மூடல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Udayam Theater ,Udayam ,Devi ,Kamala ,Sathyam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...