×

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றம்

விருத்தாசலம், பிப். 16: விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இந்த கோயிலில் உள்ள சிவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் வருடந்தோறும் மாசிமக உற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாசி மக பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விருத்தகிரீஸ்வரருக்கும், விருத்தாம்பிகைக்கும், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து, பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலிக்க, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன் எழுந்தருள கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து 12 மணியளவில் சிவாச்சாரியார்கள் சிவ மந்திரங்களை ஓத கொடிமரத்திற்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள 4 கொடி மரங்களுக்கும் தொடர்ச்சியாக கொடியேற்றம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நிகழ்ச்சிகள் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும்.

இதில் 6ம் நாள் திருவிழாவான 20ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தல், 23ம் தேதி விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தேரோட்ட நிகழ்ச்சியும், விழாவின் 10ம் நாளான 24ம் தேதி மாசி மக உற்சவமும், 25ம் தேதி தெப்பல் உற்சவமும், 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உபயத்துடனும் திருவிழா முடிவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை சார்பில் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் செய்து வருகின்றனர்.

The post விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Masimag Festival ,Vridthachalam Vridtagriswarar Temple ,Vridthachalam ,Vridtagriswarar ,Pradosham ,Utsavam ,New Year ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி