×

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் தொடர்ந்த வழக்கு; தாய்க்கு மகன் பணம் செலவழிப்பது குடும்ப வன்முறை ஆகாது: விவாகரத்து வழக்கில் மனைவியின் மனு தள்ளுபடி

மும்பை: தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் தொடர்ந்த வழக்கில், தாய்க்கு மகன் பணம் செலவழிப்பது குடும்ப வன்முறை ஆகாது எனக்கூறி மனைவியின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் உதவியாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர், தனது கணவர் மீது மும்பை நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அதில், ‘கணவர் அவருடைய தாயாரின் மனநல குறைபாடு பற்றி தெரியப்படுத்தாமல், என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார். நான் வேலைக்கு செல்வதை மாமியாரும், கணவரும் விரும்பவில்லை. அதனால் என்னை பலவகையில் துன்புறுத்தி வந்தனர். கடந்த 1993 முதல் 2004 வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த எனது கணவர், இடையிடையே இந்தியாவிற்கு வந்து செல்வார். அவர் தனது தாயாரை நேரில் சென்று பார்க்கும் போதெல்லாம், அவருக்கு ஆயிரகணகக்கில் பணம் ெகாடுப்பார். வெளிநாட்டில் வேலையில் இருக்கும் காலத்திலும் பணம் அனுப்பி வைத்துள்ளார். இது தவிர அவருடைய தாயாரின் கண் சிகிச்சைக்கும் அதிகளவில் பணம் செலவளித்தார். எனவே எனது கணவரிடம் இருந்து எனக்கு ஜீவனாம்சம் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த புகாருக்கு கணவர் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மனைவி குறிப்பிட்டு இருந்த சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அவர் என்னை கணவராக ஏற்றுக் கொண்டது இல்லை. எப்போதும் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவர் என்னை கொடுமைப்படுத்தியதால் தான், நான் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன். என்னுடைய அனுமதியின்றி என்னுடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருந்து 21.68 லட்ச ரூபாய் எடுத்து வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்.

இடைக்கால நிவாரணமாக மாதம் 3,000 ரூபாய் எனது மனைவிக்கு நீதிமன்ற உத்தரவுபடி வழங்கி வருகிறேன்’ என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, ‘தாயாருக்கு பணம் செலவழிப்பதும், அவருடன் நேரத்தை செலவிடுவதும் குடும்ப வன்முறை ஆகாது. தம்பதியினரின் மகள் மேஜர் என்பதாலும், அரசு வேலை பார்த்து சம்பாதித்து வருவதால், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை’ என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் தொடர்ந்த வழக்கு; தாய்க்கு மகன் பணம் செலவழிப்பது குடும்ப வன்முறை ஆகாது: விவாகரத்து வழக்கில் மனைவியின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Mantralaya ,Chief Secretariat ,Maharashtra State ,Dinakaran ,
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...