×

தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா? மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: ‘தாய்க்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது குடும்ப வன்முறையாக கருத முடியாது’ என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 43 வயது பெண் ஒருவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனது கணவர் மற்றும் மாமியாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், ‘என் கணவர் கடந்த 1993 செப்டம்பர் முதல் 2004 டிசம்பர் வரை வெளிநாட்டில் வேலை செய்தார்.

விடுமுறையில் இந்தியா வரும் போதெல்லாம் அவர் அவரது அம்மாவுடன்தான் அதிக நேரம் செலவிடுவார். அம்மாவுக்காக ஆண்டுக்கு ரூ.10000 பணம் தருவார். அவரது கண் அறுவைசிகிச்சைக்கும் என் கணவரே செலவழித்துள்ளார். எனது மாமியார் மனநிலை சரியில்லாதவர். அதை மறைத்து என் கணவர் என்னை திருமணம் செய்தார். என் மாமியாரும், கணவரின் உறவினர்களும் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினர். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த கணவர், ‘‘என்னை கணவராக என் மனைவி ஏற்றுக் கொண்டதில்லை. எனது என்ஆர்ஐ வங்கி கணக்கில் இருந்து எனக்கு தெரியாமல் ரூ.21.68 லட்சம் பணம் எடுத்து வீடு வாங்கி உள்ளார். அவரிடமிருந்து விவகாரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தை நான் அணுகியதால் எனக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஆஷிஷ் அயாச்சித் அளித்த தீர்ப்பில், ‘‘தாய்க்காக பணத்தையும், நேரத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது. மனுதாரர் தனக்கு நேர்ந்ததாக கூறும் பாதிப்புகளை நிரூபிக்கத் தவறி விட்டார். மேலும் மேஜரான அவரது மகள் தனியாக வசித்து வருகிறார். எனவே எந்த நிவாரணமும் பெற சட்டப்படி அவருக்கு உரிமையில்லை’’ என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா? மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bombay court ,Mumbai ,Chief Secretariat ,Mumbai Sessions Court ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!