×

தேனி மாவட்டத்தில் கண்மாய்களை ‘விழுங்கும்’ ஆகாயத்தாமரைகள்: அதிகமாக வளர்ந்து ஆக்கிரமிப்பு: கழிவுநீர் கலப்பதால் மாசு பாசன நிலங்களுக்கு பாதிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமித்து தண்ணீர் தேங்குவதை தடுக்கிறது. மேலும், கழிவுநீர் கலப்பதால், கண்மாய்கள் மாசடைகிறது. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இவைகளில் பெரியாறு பாசனம் மற்றும் மஞ்சளாறு வடிநில கோட்ட பாசனம் மூலமாக விவசாயம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் அணைகளில் நிரம்பும் நீரை திறந்து விடுவதன் மூலமாக முறைப்படுத்தப்பட்ட கண்மாய்களில் தேக்கி பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர மழைபொழியும் போது மட்டும் அதில் இருந்து கிடைக்கும் நீரினை தேக்கி பாசன நிலங்களுக்கு திறந்து விடக்கூடிய முறைசாரா கண்மாய்களும் உள்ளன. தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மஞ்சளாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஊரக உள்ளாட்சித்துறை கண்மாய்கள் மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான கண்மாய்களும் உள்ளன.

* ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இதில் சுமார் 50 சதவீதம் கண்மாய்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக நீர்நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கண்மாய்களில் நீர்நிரம்பி மறுகால் பாய்ந்தாலும், பெரும்பாலான கண்மாய்களில் ஆகாயத்தாமரை வளர்ந்து கண்மாய்களில் நீர்நிரம்பியிருப்பதையே மறைக்கும் வகையில் அடர்ந்து படர்ந்து வளர்ந்துள்ளது. இதன் காரணமாக கண்மாய்களுக்கு வரும் ஈரநில பறவைகளின் வருகையும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் குறைந்துள்ளது. சமீபத்தில் வனத்துறை சார்பில் ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியபோது, பெரும்பாலான கண்மாய்களில் நீரையே காணமுடியாதபடி ஆகாயத்தாமரைகள் வளர்ந்திருந்தததால் வழக்கமாக கண்மாய்களுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

* நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீர்

கண்மாய்களில் ஆகாயத்தாமரை வளர்வதால் கண்மாய் நீர் மாசுபடுவது அதிகரித்துள்ளது. ஆகாயத் தாமரை வளரும்போது பொதுப்பணித்துறை அவ்வப்போது ஆகாயத்தாமரையை சிறப்பு நிதி ஒதுக்கி அப்புறப்படுத்தினாலும் அடுத்த ஆண்டே ஆகாயத் தாமரைகள் வளர்வது தொடர்கதையாகிவிடுகிறது. ஆகாயத் தாமரைகள் வளர்வதற்கு பெரும்பாலும் உள்ளாட்சிகளின் விழிப்புணர்வு இல்லாததே காரணமாக அமைகிறது. பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் ஓடும் கழிவுநீர் ஓடைகளை கண்மாய்களில் நேரடியாக கலக்கச் செய்வதன் மூலமாக கண்மாய் முழுமையாக அசுத்தம் அடைந்து வருகிறது. இதேபோல பொதுமக்களும் குப்பைகளை கண்மாய்களிலும், கண்மாய் கரைகளிலும் கொட்டி வருவதை வாடிக்கையாக்கி உள்ளனர். இதன்காரணமாகவும் கண்மாய்கள் முற்றிலும் சுகாதாரமற்ற நீர்நிலையாக மாறி வருகிறது. சாக்கடை கழிவுகள் தொடர்ந்து கண்மாய்களில் கலப்பதன் மூலமாகவே கண்மாய்களில் ஆகாயத் தாமரைகள் வளருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து வருகின்றனர். கண்மாய் நீரில் அசுத்த கழிவுநீர் கலப்பதன் காரணமாக கண்மாய் ஈரநிலம் மாசுபடுவதுடன் அதில் இருந்து விவசாய நிலத்திற்க கேடு விளைவிக்கும் ஆகாயத் தாமரையும் முளைத்து விடுகிறது. ஆகாயத்தாமரை அதிகம் வளர்ந்துள்ள கண்மாய் நிரம்பியதும், அதில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்போது ஆகாயத்தாமரை வளர்ந்துள்ள கண்மாய்களில் இருந்து பாய்ச்சப்படும் தண்ணீரால் விவசாய நிலங்கள் மலட்டுத் தன்மையை அடையும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.ஆர்.ராஜன் கூறியதாவது தேனி மாவட்டத்தில் பல கண்மாய்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் நிர்வாகங்கள் விழிப்புணர்வு ஏதுமின்றி கழிவுநீரோடையினை கண்மாய்களில் கலந்து வருகின்றனர். இதனால் கண்மாய் மாசுபடுவதுடன், இத்தண்ணீர் மூலம் அருகில் உள்ள நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. மேலும் அசுத்தம் கலந்த சுகாதாரக் கேடான தண்ணீரை நிலத்திற்கு பாய்ச்சுவதன் மூலமாக விவசாயம் பாதிப்பதோடு, மனித உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் கண்மாய் நீர்நிலைகளில் அசுத்தமான கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

* மாவட்டத்திற்கு அழகு சேர்க்கும் கண்மாய்கள்

தேனியில் மீறுசமுத்திரம் கண்மாய், மந்தைக்குளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், கன்னிமார்குளம் கண்மாய், ராஜபூபாளம் கண்மாய், லெட்சுமிபுரம் கண்மாய், கருங்குளம், செங்குளம் கண்மாய், தாசன்செட்டிகுளம் கண்மாய், கோயிலாங்குளம் கண்மாய், மரிமூர் கண்மாய், போடி மீனாட்சிபுரம் கண்மாய், அம்மாகுளம் கண்மாய், கழிவு ஓடைக்குளம் கண்மாய், சின்னஒட்டன்குளம் கண்மாய், பங்காருசாமிநாயக்கன் கண்மாய், கணக்கன்குளம் கண்மாய், சிகுஓடைக்கண்மாய், நாயக்கர் குளம் கண்மாய், கோம்பை புதுக்குளம் கண்மாய் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

The post தேனி மாவட்டத்தில் கண்மாய்களை ‘விழுங்கும்’ ஆகாயத்தாமரைகள்: அதிகமாக வளர்ந்து ஆக்கிரமிப்பு: கழிவுநீர் கலப்பதால் மாசு பாசன நிலங்களுக்கு பாதிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Teni district ,Theni ,Khanmai ,Peryakulam ,Theni District ,Dinakaran ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...