×

குடிநீர், பாசனத்திற்கு பயன்படும் வகையில் மூல வைகையில் தடுப்பணை கட்டப்படுமா?வருசநாடு பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு


வருசநாடு: தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் மூல வைகை ஆறு வருசநாடு, கடமலைக்குண்டு ஒன்றிய கிராமங்கள் வழியாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கலக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும்போது, மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும். இதன் மூலம் வருசநாடு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர், பாசன வசதி பிரச்னை தீர்க்கப்படுகிறது. மேலும், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கும், மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் விநியோகத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

மூல வைகை ஆற்று நீர் மூலம் வருசநாடு பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதால், தோட்ட விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே, மழை பொய்க்கும் காலங்களில் பாசன வசதிக்கும், குடிநீருக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், மூல வைகையில் ஆங்காங்கே தடுப்பணை கட்டி நீரை தேக்கினால், மழை இல்லாத காலங்களில் குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1984ல் தடுப்பணைக்கு அடிக்கல்

இந்நிலையில், வருசநாடு மூல வைகை தடுப்பணை திட்டத்திற்கு கடந்த 1984ல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அடிக்கல் நாட்டினார். ஆனால், அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற வருசநாடு பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை மனுக்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், பலனில்லை என்கின்றனர்.

ஆழ்துளை கிணறுகள் அமைப்பு…

போதிய மழை இன்மையால் கடந்த சில ஆண்டுகளாக மூல வைகையில் நீர்வரத்து குறைவானது. இதனால், குடிநீர் பஞ்சம், வனவிலங்குகளும், கிராம பொதுமக்களுக்கும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து தேனி மாவட்ட நிர்வாகம் மூலம் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மலைக்கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. எனவே, மூல வைகை ஆற்றில் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டினால், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பஞ்சம் வராத என விவசாயிகள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். மேலும், வாலிப்பாறை மலையடிவாரம், வருசநாடு, தங்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மூலவைகை ஆற்றில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை தேக்கினால், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாது. மேலும், கண்டமனூர் கிராமத்தில் இருந்து மயிலாடும்பாறை, வருசநாடு, வாலிப்பாறை வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இவைகளுக்கு நீராதாரமாக மூல வைகை ஆறு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘‘மூல வைகை ஆற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் குடிநீர் பஞ்சம் வராது. ஆகவே, தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும். இவைகளில் மழை காலங்களில் மழைநீரை தேக்கலாம். மேலும், மூலவைகை ஆற்று தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீரை அவ்வப்போது கண்மாய்களில் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்தலாம்’’என்றனர்.

The post குடிநீர், பாசனத்திற்கு பயன்படும் வகையில் மூல வைகையில் தடுப்பணை கட்டப்படுமா?வருசநாடு பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Yarasanadu ,Teni district ,Vaigai Dam ,Andipathi ,Union of Duty ,Dinakaran ,
× RELATED வார விடுமுறையையொட்டி வைகை அணை...