×

மன்னார்குடியில் 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் பொதுமக்கள் மனு அளித்து பயனடையலாம்

திருவாரூர், பிப். 14: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வரும் 21ம் தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெறுவதையொட்டி இன்று சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் என 4 நகராட்சிகள் மற்றும் நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி மற்றும் முத்துப்பேட்டை என 7 பேரூராட்சி பகுதிகளில் இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான மனுக்கள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டது.

இதில் நகராட்சி சார்பில் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வேண்டும், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வேண்டுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடகழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு மற்றும் வருவாய் துறை, மின் துறை, காவல் துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட துறைகள் குறித்து பொது மக்களிடமிருந்து மொத்தம் 6 ஆயிரத்து 791 மனுக்கள் பெறப்பட்டு இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்டத்தின் கலெக்டர் முதல் அனைத்து உயர் அலுவலர்களும் கிராம பகுதிகளில் 24 மணி நேரம் தங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 31ம் தேதி காலை துவக்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுகா தேர்வு செய்யப்பட்டு அங்கு கடந்த மாதம் 31ம் தேதி காலை முதல் இந்த மாதம் 1ம் தேதி காலை வரையில் 24 மணி நேரமும் கலெக்டர் சாரு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் அனைவரும் தங்கியிருந்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்.

இந்நிலையில் 2வது கட்டமாக வரும் 21ம் தேதி மன்னார்குடி தாலுக்காவில் இதேபோன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டமானது நடைபெற உள்ளது. இன்று (14ம் தேதி) இந்த தாலுகாவிற்குட்பட்ட மன்னார்குடி, உள்ளிக்கோட்டை, தலையாமங்கலம் மற்றும் கோட்டூர் ஆகிய 4 சரகங்களில் இயங்கி வரும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளதால் பொது மக்கள் தங்களுக்கான கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மன்னார்குடியில் 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் பொதுமக்கள் மனு அளித்து பயனடையலாம் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Tiruvarur ,Collector ,Charu ,Commodity Revenue Inspector ,Mannargudi, Tiruvarur district ,Tiruvarur district ,
× RELATED மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4...