×

நிலுவை சொத்துவரி, தொழில்வரி வசூலிக்கும் பணிகள் மும்முரம்

சேலம், பிப். 14:சேலம் மாநகராட்சியில் சொத்து, குடிநீர், தொழில் வரி நிலுவையை வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சொத்து வரி நிலுவையை செலுத்தாத 5பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் 2.45 லட்சத்துக்கு மேல் வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்களிலும் 750க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சுகாதார துறையில் 1500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகினறனர்.வரி வசூலை கொண்டே பணியாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர்வரி, கடை வாடகையை வசூலிக்கும் பணியில் வரி வசூலிப்பவர்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். வரி செலுத்தாமல் நீண்ட நிலுவையாக வைத்துள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், அவ்வாறு செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, சீல் வைப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளை சீல் வைத்தும் வருகின்றனர். இததினடையே, நேற்று கொண்டலாம்பட்டி மண்டலம் 60வதுவார்டுக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் 5 தனியார் பெட்ரோல் பங்க் சொத்து வரியை செலுத்தவில்லை, இதையடுத்து கொண்டலாம்பட்டி மண்டல வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று சீல் வைத்தனர். உடனே பெட்ரோல் பங்க்கின் நிர்வாகிகள் சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினர். அப்போது ஒரு நாளில் சொத்து வரி நிலுவையை செலுத்தி விடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளின் அறிவுரையின் பேரில், வருவாய் அதிகாரிகள் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்ததை நீக்கினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் இருந்து சொத்து வரி, தொழில் வரி மூலம் பணியாளர்களுக்கு சம்பளமும், வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு மேல் சொத்து, குடிநீர், தொழில் வரி நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட வருவாய் அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டும், நிலுவை வரியை வசூலிக்கும் பணி மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி கமிஷனர் அறிவுரையின் பேரில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேலம் மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் திறந்திருக்கும். எனவே சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை மற்றும் கடை வாடகை அனைத்து நிலுவை தொகைகளையும் செலுத்தி கொள்ளலாம். அரசு விடுமுறை நாட்களில் தவிர அனைத்து நாட்களிலும் நிலுவை வரியை பொது மக்கள் நான்கு மண்டல வரி வசூல் மையங்களிலும் செலுத்தலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post நிலுவை சொத்துவரி, தொழில்வரி வசூலிக்கும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,Suramangalam ,Astampatti ,Dinakaran ,
× RELATED வாலிபரை தாக்கியவர் கைது