×

கோட்டை ரோடு சந்திப்பில் தற்காலிக ரவுண்டானா

நாமக்கல், பிப்.14: நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸ் நேரங்களில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கோட்டை ரோடு, பரமத்தி ரோடு, பஸ் ஸ்டாண்ட் மெயின்ரோடு ஆகிய பகுதியில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரில் பயணியர் விடுதி, சேலம் ரோடு என இரண்டு இடங்களில் மட்டும் சிக்னல்கள் தற்போது இருக்கிறது.
காவல் நிலையம் அருகே துறையூர் ரோடு, திருச்சி ரோடு என இரண்டு சாலைகளும் சந்திக்கிறது. இங்கு வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். டூவீலர்களில் செல்பவர்கள், எந்த சாலையில் பயணிப்பது என்று தெரியாமல், வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் வேகத்துக்கு ஏற்ப, வேறு சாலையில் சென்று விடுவார்கள். இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தது. இதை தடுக்க காவல்துறை சார்பில், அந்த இடத்தில் புதியதாக சிக்னல் அமைக்கப்பட்டது.

ஆனால் அதில், இரண்டு சாலைகளிலும் இருந்து வரும் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் இரண்டு நிமிடம் வரை வைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த புதிய மாற்றத்தை காவலர்களை நிறுத்தி செயல் படுத்தாமல், காவல் துறையினர் விட்டுவிட்டனர். இதனால் வாகன ஓட்டுனர்களும் நீண்ட நேரம் காத்திருக்க எரிச்சல் அடைந்து இஸ்டத்துக்கு வாகனங்களை இயக்க தொடங்கினர். நாளடைவில் இந்த சிக்னல் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தற்போது புதியதாக பரமத்திரோடு செலம்பகவுண்டர் பூங்கா, கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கிறது. பரமத்தி சாலை, கடந்த ஆண்டு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது முதல் இந்த பிரச்னை ஏற்பட்டது. மேலும் பரமத்தி சாலையில் இருந்து, கோட்டை சாலைக்கு செல்ல ஒரே சாலையில் இரண்டு இடங்களில் பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு பகுதியின் வழியாகவும் டூவீலர் மற்றும் கார்களில் வருபவர்கள் பயணிக்கிறார்கள்.

குறிப்பாக கோட்டை ரோட்டில் ஆஞ்சநேயர் கோயில் இருப்பதால், அந்த சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் இருந்து வருபவர்கள், பேரிகார்டின் ஒரு பகுதி வழியாக திறந்து விடப்பட்டுள்ள சாலையிலும், பஸ் ஸ்டாண்டில் இருந்து பரமத்தி சாலை வழியாக வருபவர்கள், கோட்டை சாலைக்கு செல்ல மற்றொரு பாதையையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பரமத்தியில் இருந்து கார்களில் வருவர்கள் குழப்பமடைந்து விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது.

இதனால் சிறிய, சிறிய விபத்துக்கள் இந்த பகுதியில் தினமும் நடந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் சிவக்குமார் மற்றும் போக்குவரத்து போலீசார், நேற்று இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பரமத்திரோடு, கோட்டை ரோடு சந்திப்பில் பேரிகார்டுகளை ஒழுங்கு படுத்தி, ஒரு தற்காலிக ரவுண்டானா மாதிரி தோற்றம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு பாதைகள் அடைக்கப்பட்டு, கோட்டை ரோடு செல்ல ஒரேபாதை மட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதை ஒருவார காலம் சோதனை அடிப்படையில் பார்த்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை சரியாக வரா விட்டால், புதியதாக அந்த இடத்தில் சிக்னல் பொறுத்தி வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

The post கோட்டை ரோடு சந்திப்பில் தற்காலிக ரவுண்டானா appeared first on Dinakaran.

Tags : Castle Road junction ,Namakkal ,Fort Road ,Paramathi Road ,Bus Stand ,Road ,Fort Road Junction ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை