×

கடந்த 32 மாத திமுக ஆட்சியில் தமிழகத்தில் ரூ.9.65 லட்சம் கோடி முதலீடு 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) பேசியதாவது: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் முன்பு அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்படும். ஆனால், இந்த அரசு முன்னேற்பாடு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: 3 மணி நேரத்தில் 33 செ.மீ. மழை பெய்தது. அப்படி இருந்தும் 3 நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. 2016ல் ஒரு வாரத்தில் 33 செ.மீ. மழை பெய்தது. ஆனால், இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாள் ஆனது. ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் இன்னும் பணியில் உள்ளனர்.
ஆர்.பி.உதயகுமார்: 2011ல் அதிமுக ஆட்சியில் ‘தானே’ புயல் வந்தது. தொடர்ந்து, வர்தா, கஜா புயல்கள் வந்தன. சுனாமியின் வேகத்தைவிட மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் இருப்பதே அதிமுக ஆட்சி காலத்தில்தான் தெரிந்தது.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது எப்படி?
ஆர்.பி.உதயகுமார்: சென்னையில் ஒரு சொட்டு மழைநீர் தேங்காது என்றீர்கள்.
அமைச்சர் சேகர்பாபு: 2016 தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி, சென்னையை சிங்கப்பூராக மாற்றுவதாக கூறினார். ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்காது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்று சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.
அமைச்சர் கே.என்.நேரு: ஒரே நாளில் 80 செ.மீ. அளவுக்கு பெருமழை பெய்ததால்தான் தண்ணீர் தேங்கியது. அதுவும் 2 நாளில் வடிந்துவிட்டது.
ஆர்.பி.உதயகுமார்: 38 எம்.பி.க்களை வைத்திருந்தும் ஒரு பைசா கூட மழை வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசிடம் வாங்க முடியவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும், தமிழக நிதியை முதல்வர் ஒதுக்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: 2015 டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சமாக 36 ஆயிரம் கனஅடி தண்ணீரைத்தான் திறக்க முடியும்.
ஆர்.பி.உதயகுமார்: 32 மாதங்களில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது?.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: திமுக ஆட்சியில் கடந்த 32 மாதத்தில் 9.65 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 31 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 875 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.
ஆர்.பி.உதயகுமார்: மதுரையில் நூலகம் திறந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால், மழைக்கு நீர் ஒழுகுகிறது. எஸ்கலேட்டரும் இயங்கவில்லை.
அமைச்சர் பி.மூர்த்தி: அந்த நூலகத்துக்கு ஒரு நாளைக்கு 2,000-3000 பேர் வருகிறார்கள். எங்கும் மழைநீர் ஒழுகவில்லை.
எடப்பாடி பழனிசாமி: எங்கள் உறுப்பினர் கோரிக்கைதான் வைத்தார். அதை நிறைவேற்றித்தர வேண்டும்.
அவை முன்னவர் துரைமுருகன்: அப்படி எதுவும் இருந்தால் சரிசெய்யப்படும்.

The post கடந்த 32 மாத திமுக ஆட்சியில் தமிழகத்தில் ரூ.9.65 லட்சம் கோடி முதலீடு 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,Minister ,D. R. P. Raja ,AIADMK ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Vice Leader of the Opposition ,Thirumangalam ,RB Udayakumar ,North East Monsoon ,.RP ,Raja ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு