×

நீக்கப்பட்ட வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியீடு ஆளுநர் ரவி மீது உரிமை மீறல் பிரச்னை: பரிசீலனையில் இருப்பதாக பேரவை தலைவர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்த உரிமை மீறல் பிரச்னை தொடர்பான கடிதம், பரிசீலனையில் இருப்பதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். 2024ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்க கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.

தொடர்ந்து ஆளுநர் உரையை படிக்க ஆரம்பித்தார். அரசு தயாரித்து ெகாடுத்த 46 பக்கம் கொண்டு ஆங்கில உரையில், முதல் பக்கத்தை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, சில கருத்துக்களை அவையில் பதிவு செய்தார். சுமார் 4 நிமிடத்தில் பேசி முடித்துவிட்டு மற்ற பக்கங்களை படிக்காமல் அமர்ந்து விட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை தமிழில் படித்தார். அவர் படித்து முடித்ததும், அவை முன்னவர் துரைமுருகன், புத்தகத்தில் இல்லாமல் ஆளுநர் பேசியது எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது. அரசு தயாரித்து கொடுத்த ஆங்கில உரை மட்டுமே முழுமையாக அவையில் இடம்பெறும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் அவையில் படித்து கொண்டிருந்தபோதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். பிறகு துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசின் உரையில் இடம் பெறாத சில கருத்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் தெரிவித்தது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநர், தான் பேரவையில் பேசிய பேச்சை வீடியோவாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அதற்கு தலைப்பும் பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழக வரலாற்றில் நடைபெறாத சம்பவமாக கருதப்படுகிறது. பொதுவாக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களை வெளியிட கூடாது என்பது மரபு. அப்படி வெளியிட்டால் நீக்கப்பட்ட கருத்தை வெளிட்ட நபர்கள் மீது அவை உரிமைக்குழு கூடி, அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தப்படும்.

சட்டப்பேரவையில் இதற்கு முன்புகூட இதுபோன்று அவையில் நீக்கப்பட்ட கருத்துக்களை செய்திகளாக வெளியிட்டதாக சில வார மற்றும் தினசரி பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று 2ம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னதாக பேரவை தலைவர் அப்பாவுவை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அதில், “விதி எண் 220ன்படி நேற்று முன்தினம் ஆளுநர் உரையின்போது தெரிவித்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டது. அவற்றை உள்நோக்கத்தோடு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கவர்னரின் செயல்பாடுகள் அவை உரிமை மீறல் ஆகும். இதுபற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி உரை படிக்க சட்டப்பேரவைக்கு வந்தபோது, நீங்கள் (சபாநாயகர்) கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். அவர் பேசிய சில கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். 2021ம் ஆண்டு தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்தே…..
சபாநாயகர் அப்பாவு: நீங்கள் தமிழக ஆளுநர் மீது கொடுத்த கடிதம் என்னுடைய பரிசீலனையில் உள்ளது.

The post நீக்கப்பட்ட வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியீடு ஆளுநர் ரவி மீது உரிமை மீறல் பிரச்னை: பரிசீலனையில் இருப்பதாக பேரவை தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Speaker ,CHENNAI ,Congress Legislative Party ,Selvaperundhai ,RN ,Legislative Assembly ,Governor's House ,President of the Assembly ,Dinakaran ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து