மஞ்சூர், பிப்.14: மஞ்சூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் பான்பராக், பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. மேலும், போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழிக்கவும் காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களின் அருகே போதை பொருட்கள் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மஞ்சூர் அருகே உள்ள இத்தலார் மற்றும் எடக்காடு பகுதிகளில் தனிபிரிவு எஸ்.ஐ.அப்பாஸ் தலைமையில் போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் முத்துகுமார், ஐயப்பன் ஆகியோரது கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து எமரால்டு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
The post மஞ்சூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.