×

சட்டசபையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்; ஒருங்கிணைந்த அரசு வணிக வளாகம் உருவாக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உறுதி

சென்னை: பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சோளிங்கநல்லூரில் ஒருங்கிணைந்த அரசு வணிக வளாகம் உருவாக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சோளிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ ச.அரவிந்த் ரமேஷ் பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு என வட்டாட்சியர் அலுவலகம் தனியாக கலைஞர் ஆட்சியில் 2006 – 2011ல் பிரிக்கப்பட்டு இன்று வரை போதிய இடவசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதே போன்று அரசு அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் அலுவலகம், துணை ஆணையாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, நீதிமன்றம் போன்ற அரசு அலுவலகங்கள் எல்லாம் இன்றைக்கு தனியார் வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் போதிய வசதி இல்லாமல் தினந்தோறும் அவதிப்படுகிறார்கள். ஆகவே, இன்றைக்கு தமிழக அரசால் 574 என்கிற அரசு தரிசு புறம்போக்கு, தனியாரிடம் இருந்து 69 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மேற்சொன்ன ஒருங்கிணைந்த அரசு வணிக வளாகத்தை உருவாக்கி, அதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘உறுப்பினர் சொன்னதை போல, சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிறைய இடங்களை எல்லாம் வருவாய்துறை மூலம் எடுத்து கொண்டு இருக்கிறோம். அப்படி எடுகின்ற இடங்களில் எல்லாம் அரசு துறை சார்ந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று முதல்வர் எங்கள் மத்தியில் சொல்லியிருக்கிறார். அப்படி கட்டிடங்கள் கட்டுகின்ற நேரத்தில் அந்த அலுவலகங்கள் தனித்தனியாக இல்லாமல் எல்லாம் இணைந்த ஒரு பெரிய கட்டிடமாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அப்படி கட்டிடங்கள் கட்டுகிற நேரத்தில் உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

The post சட்டசபையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்; ஒருங்கிணைந்த அரசு வணிக வளாகம் உருவாக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Arvind Ramesh ,MLA ,Minister ,KKSSR ,CHENNAI ,Cholinganallur ,DMK ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED இரவு தூங்கும் முன் ‘எக்ஸ்ட்ரா ஒரு...