- பெரும்பாக்கம்
- செம்மஞ்சேரி
- கண்ணகி நகர்
- அரவிந்த் ரமேஷ்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- சோஷிங்கநல்லூர்
- திமுக
- Semmanjeri
- தின மலர்
சென்னை: பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று, சட்டசபையில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தினார். பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய திட்டப் பகுதிகளில் 50,000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். அவர்கள் சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும் செல்வதற்குக் கூடுதலாக வழித்தடங்களையும், கூடுதலாக பேருந்துகளையும் இயக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், கலைஞர் ஆட்சியில் 2008ம் ஆண்டு ஓம்ஆர், இசிஆர், வேளச்சேரி மெயின் ரோடு போன்றவற்றில் கூடுதலாக குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பேருந்துகள் எல்லாம் கடந்த கால ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதையும் மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல், சோழிங்கநல்லூரை தலைமையிடமாக கொண்டு புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் அதிக அளவில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதற்கு புறநகர் பேருந்து பணிமனையை புதிதாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘உறுப்பினர் கேட்டுக்கொண்ட அந்த பாதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, சோழிங்கநல்லூர் பகுதிக்கு குளிர்சாதன பேருந்துகள் இயக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
இப்போது பழைய பேருந்துகளை மாற்றி வருகிறோம். முதலில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஆணையை முதல்வர் பிறப்பித்து, அந்த பேருந்துகள் எல்லாம் வாங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னைக்கான தாழ்தள பேருந்துகள் அடுத்த மாதம் ஜூலை மாதத்தில் வரவிருக்கிறது. அந்த பேருந்துகள் முதல்வருடைய பொற்கரங்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது. அதற்குப்பிறகு உறுப்பினர் அவர்கள் கேட்ட அந்தக் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று, பேருந்துப் பணிமனையைப் பொறுத்தவரை சென்னை மாநகரத்திலே போதுமான அளவுக்குப் பேருந்துப் பணிமனைகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் இயக்குவதற்கு இப்போதைக்கு அரசினுடைய நிதிநிலைக்கு அதைச் செய்வதற்கு வாய்ப்பில்லை,’’ என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.