×

பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு; நவாஸ், இம்ரான் கான் கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமர்களான இம்ரான் கான் மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 4 மாகாணங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. இதில், 265 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 134 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு பேட் சின்னம் கிடைக்காததால் அக்கட்சியினர் பலர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் இம்ரான் ஆதரவாளர்கள் உட்பட சுயேச்சைகள் 101இடங்களையும், மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி (பிஎம்எல்-என்) 75 இடங்களையும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கட்சி (பிபிபி) 54 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

இதனால் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகி உள்ளது. நவாஸ் மற்றும் பிபிபி கட்சிகள் கடந்த 2 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம் நவாஸ் கட்சி சுயேச்சைகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 10 சுயேச்சைகள் தங்களுக்கு ஆதரவு தந்துள்ளதாகவும் இதனால் கட்சியின் பலம் 85 ஆக அதிகரித்துள்ளதால் பாகிஸ்தானின் 4வது பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சமயம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் செய்தி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில், ’’பிஎம்எல்-என், பிபிபி, எம்க்யூஎம் ஆகிய கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது. இந்த 3 கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பிடிஐ மேற்கொண்டுள்ளது. இதற்காக உயர்மட்ட உத்தி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார். பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்படி, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த 3 வாரத்திற்குள் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். அதன்படி பார்த்தால் வரும் 29ம் தேதிக்குள் ஆட்சி அமைக்க ஏதேனும் ஒரு கட்சி தயாராக வேண்டும்.

The post பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு; நவாஸ், இம்ரான் கான் கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி appeared first on Dinakaran.

Tags : Nawaz ,Imran Khan ,ISLAMABAD ,Pakistan ,Prime Ministers ,Nawaz Sharif ,Parliament ,Dinakaran ,
× RELATED சாட்டை துரைமுருகனுக்கு நவாஸ் கனி தரப்பு நோட்டீஸ்..!!