×

காட்டு தீ தடுக்க சாலையோரம் தீ தடுப்பு கோடு அமைப்பு

ஊட்டி: காட்டு தீ ஏற்படுவதை தடுக்க முதுமலையில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகம் செல்லும் சாலையோரங்களில் ‘கவுன்டர் பயர்’ முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. மேலும் உறைபனி மற்றும் வெயிலின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தற்போது வனங்கள் காய்ந்து போயுள்ளன.

மித வெப்ப பகுதியான முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் போன்ற பகுதிகளில் புற்கள், செடி, கொடிகள் காயத்துவங்கியுள்ளன. இதனால் யானை, புலி, காட்டுமாடு போன்ற விலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம் பெயர துவங்கியுள்ளன. வனங்கள் காய்ந்துள்ளதால், காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. மேலும், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாகவே ஊட்டி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிகரெட் புகைத்து விட்டு சாலையோரங்களில் வீசினால் காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், காட்டு தீ ஏற்படாமல் தடுக்க முதுமலை புலிகள் காப்ப கத்திற்குட்பட்ட பகுதி மற்றும் வன பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதுமலை-பந்திப்பூர் இடையே மைசூர் சாலையின் இருபுறங்களிலும் தீ தடுப்பு கோடுகள் கவுன்டர் பயர் முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையில் இருந்து 30 மீட்டர் தொலைவிற்கு உள்ள செடி கொடிகள் மற்றும் புற்கள் ஆகியவை சேகரித்து தீ மூட்டப்பட்டு, பின் அவைகள் எரிந்து முடிந்தவுடன் தீ பரவாமல் இருக்க உடனடியாக அணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தீ தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post காட்டு தீ தடுக்க சாலையோரம் தீ தடுப்பு கோடு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Bandhipur Tigers Archive ,Mudumala ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நீலகிரி யானை வழித்தட விவகாரத்தில்...