×

சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

சென்னை: சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை தீர்ப்பளித்தது. விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், பிப்ரவரி 2, 2024 அன்று மாநில அரசுக்கு துணை உயர் ஆணையம் எழுதிய கடிதத்தின் நகலை சமர்ப்பித்தார். சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணங்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒன்றிய வெளியுறவுத் துறை தரப்பில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினார். தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணம் வந்து சேரவில்லை. தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஒன்றிய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,தாயை கவனித்துக் கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு பிப்ரவரி.29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Santhan ,Union Govt ,Madras High Court ,Chennai ,Union Government ,Shanthan ,Nalini ,Murugan ,Chandan ,Rajiv Gandhi ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...